
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
ட்ரெக்கிங் என்பதன் அர்த்தம் முழுமையாக தெரியும் முன்பே சென்ற மலையேற்ற பயண அனுபவம் இது.
பன்னிரண்டாம் வகுப்பு (2012இல்) படித்துக்கொண்டிருக்கும் பொழுது பள்ளியில் ஊட்டி அழைத்து செல்வதாகக் கூறினார்கள். நானும் வீட்டில் பெற்றோர்களிடம் மூன்று நாட்கள் ஊட்டி சென்று வர அனுமதி பெற்றேன். கட்டணத் தொகையாக இரண்டையிரம் ரூபாயையும் பெற்றுக் கொண்டேன்.
எங்கள் பள்ளியின் இணைச் செயலாளரும் எங்களுடன் வந்தார். இது வழக்கமான சுற்றுலா அல்ல நாம் இயற்கையோடு மூன்று நாட்கள் வாழப் போகிறோம் மலையேற்றம் செய்யப் போகிறோம் அதற்கு தகுந்தாற் போல் தயாராகி வர அறிவுறித்தினார். ஜெர்கின் ஷூ கட்டாயம் உடன் எடுத்து வரச் சொன்னார்.
எனினும் எனக்கு அது பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் வழக்கமான சுற்றுலாவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தான் கிளம்பினேன்.
மூன்று நாட்களுக்கான உடை, ஜெர்கின், ஷூ அம்மாவின் அன்புக் கட்டளையில் பத்து சப்பாத்தி பசிக்கும் பொழுது உண்பதற்காக என எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டேன்.
என்னுடைய பட்டன் போனில் உள்ள கேமரா விடமும் என் தோழியின் புகைப்பட கருவியிடமும் என் புகைப்படம் எடுக்கும் ஆசையை ஒப்படைத்தேன்.
முந்தைய நாள் இரவு பள்ளியில் சென்று தங்கிக் கொண்டோம். அங்கிருந்து அதிகாலை நான்கு மணிக்கு ஊட்டிக்குக் கிளம்பினோம். மொத்தம் இரண்டு பேருந்தில் கிட்டத்தட்ட எண்பது பேர் சென்றோம். மாணவிகள் மட்டும் செல்லும் இந்த பயணத்தில் எங்கள் பள்ளி இணை செயலாளர் அம்மாவும் எங்களுடன் வந்தார்.
எட்டு மணிக்கு மேட்டுப்பாளையம் சென்று அடைந்தோம். உணவருந்த நிறுத்தினார்கள். பலர் தங்கள் கொண்டு வந்திருந்த உணவையையே சாப்பிட்டனர். நானும் என் தோழிகளும் என் அம்மாவின் சப்பாத்தி மற்றும் தக்காளி ஊறுகாயைச் சாப்பிட்டோம்.
ஒன்பது மணிக்கு ஊட்டி மலை ஏற தொடங்கினோம். குளிர் காற்று எங்களைத் தீண்டத் தொடங்கியது. மேலே செல்லச் செல்ல பனி மூட்டம் அதிகரித்தது.
ஆங்காங்கே தெரிந்த டீ எஸ்டேட்களையும் பசுமையான தோட்டங்களையும் பார்த்து ரசித்துக் கொண்டே சென்றோம். எனக்கு அது தான் ஊட்டிக்கு முதல் பயணம். அதனால் எல்லாம் ஆச்சர்யமாகத் தான் இருந்தது.

ஊட்டியைச் சென்றடைந்தோம். ஒரு சில இடங்களில் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு மதிய உணவு சாப்பிட்டு முடித்தோம்.
“இனிமே தான் நம்ம போக வேண்டிய இடத்துக்கு கிளம்பப் போறோம்.. எல்லாம் ரெடியா?” என்றார் எங்கள் இணைச் செயலாளர்.
ஆர்வம் பொங்க எல்லாரும் மீண்டும் பேருந்தில் ஏறி அமர்ந்தோம்.
இன்னும் கொஞ்சம் மலை ஏறி காடுகளின் ஊடே சென்று நின்றது பேருந்து. (மலை உச்சியின் பெயர் இப்பொழுது நினைவில் இல்லை).
அங்கே ஒரு சின்ன ஓட்டு வீட்டில் எங்களுக்கான தேநீர் தயாராகி இருந்தது.
மலையின் உச்சியில் நின்று கொண்டு தேநீர்.
தேநீர் இடைவேளை முடித்து விட்டு எங்களை ஒரு கூடாரத்தில் கூடச் சொன்னார்கள். அப்பொழுது அங்கே ஒரு முதியவர் வந்தார். அவரைப் பார்த்ததும் எங்கள் பள்ளி இணைச் செயலாளர் எழுந்து வணங்கினார்.
நாங்களும் எழுந்து வணங்கினோம்.
“குட் ஈவினிங் மை டியர் ஸ்டுடென்ட்ஸ்” என்றார் உரத்த குரலில். அடடா குரலில் எவ்வளவு கம்பீரம்.
அய்யா சிறு வயதில் இருந்தே மலையேற்ற பயிற்சி வழங்கி வருகிறார். பல மலைகளின் உச்சியில் மலை ஏற்றம் செய்துள்ளார். காடுகளில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். பேராண்மை திரைப்பட குழுவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இன்னும் அவரைப் பற்றிய பல செய்திகளை பெருமையுடன் பகிர்ந்தார் இணைச் செயலாளர்.
பின் அவர் மலைகளின் வரலாற்றை எங்களிடம் பகிர்ந்தார். நாளைய மலையேற்றத்திற்கு தயாராகச் சொன்னார்.
இரவு உணவை முடித்து விட்டு உறங்கச் சென்றோம்.
அங்கே இன்னொரு ஆச்சர்யம் காத்திருந்தது.

பதினைந்து இருபது டென்ட்கள் கட்டப்பட்டிருந்தன. டென்டில் நான்கு பேர் விதம் படுத்துக் கொள்ள வலியுறுத்தினர்.
நான் வியப்பில் நின்று கொண்டிருந்தேன். இதையெல்லாம் திரைப்படங்களில் தான் பார்த்திருக்கிறேன் இன்று நானே இது போன்ற கூடாரத்தில் உறங்கப் போகிறேன்.
நானும் என் நெருங்கிய தோழிகளும் ஒரு கூடாரத்தில் படுக்கச் சென்றோம்.
எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கலகலவென இருந்த இரவு டென்டுக்குள் சென்று படுக்கும்பொழுது ஓர் அசாதாரண அமைதியைத் தந்தது.
இப்படி காட்டுக்குள் வந்து வெட்ட வெளியில் டென்டுக்குள் படுத்துக் கொண்டிருக்கிறோமே மிருகங்கள் நடமாட்டம் இருந்தால் வேறு ஏதாவது உயிரனம் உள்ளே வந்தால் என்ன செய்வது…
இல்லை இல்லை வெளியில் காவலுக்கு ஆட்கள் இருக்கின்றனர். சில பணியாளர்களும் இருக்கின்றன. சமையல் வேலைகளுக்கும் பராமரிப்பு வேலைக்கும் ஆட்கள் இருக்கின்றன.
அந்த தைரியத்தில் தோழிகளிடம் பேசிக்கொண்டே உறங்கினேன்.
காலையில் சூரிய உதயத்தின் போது விசில் சத்தம் கேட்டது. எல்லோரையும் எழுப்ப எழுந்த சத்தம்.
ஜிப்பால் மூடி இருந்த டென்ட்டை திறந்து வெளியே வந்தேன்.
குளிர் நடுங்கச் செய்தது. சால்வையால் போர்த்திக் கொண்டேன்.
வானம் இன்னும் தெளியவில்லை. அதுவும் குளிரில் கருப்பு நிற போர்வை போர்த்தி இருந்தது.
சூரியன் இன்னும் பலம் கொண்டு எழ வேண்டும் வெளிச்சத்தைக் கூட்ட!
சுடச் சுடத் தேநீர் தயாராக இருந்தது.
வீட்டில் இருந்தால் காலை எழுந்ததும் தேநீர் குடிக்கும் பழக்கம் எல்லாம் இல்லை. காலை உணவை சரியாக சாப்பிட மறுக்கிறேன் என்பதால் அம்மா தேநீர் தரமாட்டார்.
இப்பொழுது குடிக்க வேண்டும் போல் இருந்தது. என் உணவை எனக்கு தேவையான அளவை நானே முடிவு செய்யும் சுதந்திரம் என்னிடம் உள்ளது இந்த பயணத்தில்.
இன்றைய பயணத்திற்குத் தயாரானோம். ஆடைக்கு மேல் குளிர் தாங்க ஜெர்கின் அணிந்து கொண்டேன். நடப்பதற்கு ஏதுவாய் ஷூ அணிந்து கொண்டேன்.

மதிய உணவிற்கு தக்காளி சாதமும் வேக வைத்த முட்டையும் தயார் செய்து இருந்தனர். அதை தனியாக கப்பில் எடுத்துக் கொண்டோம்.
அனைவரையும் நிற்க வைத்து வருகை பதிவை எடுத்துக் கொண்டு நடைப் பயணத்தை தொடங்கினார்கள்.
எங்களுக்கு வழிகாட்டியாக அய்யா முன் சென்றார். இணைச் செயலாளர் ஆசிரியைகள் எங்களுக்குத் துணையாக வந்தனர்.
நடக்க நடக்க சுற்றி உள்ள இடங்கள் எனக்குப் பெரும் வியப்பை தந்தன. வெறும் மலை ஏற்றம் மட்டும் அல்ல. காடுகளை சுற்றிப் பார்க்கும் நடைப் பயணம்.
இயற்கையில் இருந்து அப்படி ஒரு வாசனை வழியெங்கும் கசிந்து கொண்டிருந்தது. சுத்தமான காற்று. எந்த செயற்கையான வாசனையும் கலக்காத தூயக் காற்று. எங்களைத் தவிர வேறு எங்கும் மனித நடமாட்டமே இல்லாத இடம். நெகிழிகளோ மக்காத குப்பைகளோ துளியும் இல்லாத செழிப்பில் வனம்.
இப்படி ஒரு பயணம் அமைந்ததில் அந்த நொடி அதிர்ஷ்டசாலியாய் உணர்ந்தேன்.
பசுமையான புல்வெளிகள், அடர்ந்த மரங்கள், மலை அருவிகள், பழங்குடியினர் வாழ்ந்த இடங்கள் என பலவற்றை இரசித்துக் கொண்டே நடந்தோம்.
இருட்டுவதற்குள் டென்ட்டிற்கு திரும்ப வேண்டும் என்பதால் நான்கு மணிக்கே எங்களை அழைத்து வந்து விட்டார்.
விறகுகளில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தோம்.
இன்றும் கூடாரத்தில் கூடினோம். அய்யா இன்றைய பயணத்தின் நோக்கம் சென்ற இடங்கள் இன்னும் பல அறிய தகவல்களை கூறினார் எழுத பேனாவை பிடித்தால் கைகள் நடுங்கின. அவ்வளவு குளிரில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தோம்.
அனுமதி பெற்றவர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் மாணவர்களுக்கு மட்டுமே அங்கே பயணிக்க அனுமதி உண்டு என்றார். இன்னும் இப்படிப்பட்ட காடுகள் பல காக்கப்பட்டு வருவதில் மகிழ்ந்தேன்.
இரவு உணவாக சப்பாத்தியும் சிக்கன் குருமாவும்.. நடந்த நடைக்கு இரண்டு சப்பாத்திகள் சேர்ந்தே சாப்பிட்டேன். குளிருக்கு கோழிக் கறி என்னே சுவை!
இன்று டென்ட்டில் உறங்கும் பொழுது பயம் இல்லை. ஏதோ ஒரு பெருமை.
தோழிகளுடன் பெருமையாக பேசிக் கொண்டேன்.
“படுத்துல தான பாத்துருக்கும் டென்ட் நம்லே இப்போ இதுல படுத்துருக்கோம். காடுலாம் சுத்தி பாக்கறோம்.. இங்க பாரேன் யாருமே இல்லாம நம்ம மட்டும் ஒரு உலகத்துல இருக்க மாதிரி இருக்கோம்”
அதே உற்சாகத்தில் அடுத்த நாளும் காடுகளை ஆதி கால மனிதர்களாய் மாறி நடந்து திரிந்து வந்தோம்.
நான்காம் நாள் விடிந்ததும் வீடு திரும்பினோம்.
ஒரு பயணம் இத்தனை ஆண்டுகள் கழித்தும் பசுமையாய் காடுகளின் வாசனையுடன் நினைவில் நிற்கின்றதே.
எத்தனையோ பயணங்கள் சென்றிருந்தாலும் இந்த பயணம் தந்த வித்தியாசமான அனுபவம் மனதிற்கு நெருக்கமான எப்பொழுதும் நெகிழ்ச்சியான ஒன்று தான்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!
Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ