
‘வக்பு திருத்த சட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும்’ என்பது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் மதுரையில் நடந்த மனிதநேய மக்கள் கட்சியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித நேய மக்கள் கட்சியின் பேரணி மற்றும் மாநாடு மதுரை மஸ்தான்பட்டி பகுதியில் நேற்று நடந்தது. கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமை தாங்கிய இந்த மாநாட்டில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
தீர்மானங்கள் :
1) உலகில் மாபெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் என அனைத்து தளங்களிலும் சிறுபான்மையினை சமுதாயங்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உணர்வாக இருக்கிறது.
ஆனால் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் சட்டம் இயற்றும் மன்றங்களில் முஸ்லிம்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டு வருகிறது.
2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், 24 முஸ்லிம்கள் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மொத்த எம்பிக்களில் இது 4.4 சதவிகிதம் மட்டுமே. இது முஸ்லிம் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு கூட இல்லை. இந்தியா முழுவதும் உள்ள 4123 சட்டமன்ற உறுப்பினர்களின் வெறும் 296 பேர் மட்டுமே முஸ்லீம்கள். உள்ளாட்சிகளிலும் இன்னும் பரிதாப நிலையே நிலவுகிறது. எனவே அரசியல் அதிகாரத்தை செயல்படுத்தும், சட்டம் இயற்றும் மன்றங்களில், உள்ளாட்சி மன்றங்களில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவத்தை தர அனைத்து கட்சிகளும் உடனே கொள்கை முடிவை அறிவித்து செயல்படுத்த வேண்டும்.
2) வக்பு திருத்த சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சி, தி.மு.க., காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடுத்து விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசு வக்பு திருத்தச் சட்டத்தை அமல்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. எனவே மத்திய அரசு உடனடியாக மக்கள் விரோத வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். மேலும் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதுடன் அந்தச் சட்டத்தை வலிமையாக எதிர்த்து வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த மாநாடு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. உள்ளிட்ட தீர்மானங்களுடன்,

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் நடைபெறும் தேர்தல் முறை மக்களாட்சி முறைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்றும், இந்திய அரசு தனது இஸ்ரேல் ஆதரவு போக்கை கைவிட்டு, இந்தியாவில் இயங்கும் இஸ்ரேல் நிறுவனங்களை வெளியேற்ற வேண்டும் என்றும்,
குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப்தன்கர் அரசியலமைப்பு சட்டத்திலிருந்து மதச்சார்பன்மை, சமூகவுடமை ஆகிய சொற்களை நீக்க வேண்டும் என்று பேசியது வேதனைக்குரிய செயல் என்றும், தமிழ்நாட்டு பல்கலைக்கழக பாட நூல்களில் பாசிச ஊடுருவல்களை தடுத்த நிறுத்த வேண்டும் என்றும், தனியார் துறைகளிலும் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்றும்,
புழல் சிறையில் விசாரணை கைதிகள் மீதான தாக்குதல் சம்பவங்களை கண்டிப்பதாகவும், நீண்ட கால விசாரணை கைதிகளுக்கு பிணை வழங்கப்பட வேண்டும் என்றும், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவை மாற்ற முயல்வது சட்டவிரோதமான செயல், சிக்கந்தர் தர்காவை காப்பாற்றவும், அங்கு அடிப்படை வசதிகளை செய்து தரவும் மலைப்பாதையை செப்பனிடவும் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.