
நாமக்கல் மாவட்டம், தில்லைபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி(54), திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பறக்கும் படையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரமிளா(50), ஆண்டாபுரம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், இன்று காலை சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி பிரமிளா, நாமக்கல் வகுரம்பட்டி பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர். உடனடியாக அப்பகுதி மக்கள் ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு ரயில் காவல்துறை மற்றும் நாமக்கல் காவல்துறையினர் சென்று சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், சுப்பிரமணியின் மகள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வந்த நிலையில், மகள் வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளார். இதனால் இருவரும் மனவிரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நேற்று இரவு வீட்டில் சுப்பிரமணியின் மகள் கூறியவுடன், சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி பிரமிளா வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாகவும், அவர்களை மகள் காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை அரசு ஊழியர்கள் இருவரும் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த சம்பவம், நாமக்கல்லில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.