
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி நாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘ஃபீனிக்ஸ்’. ஆக்ஷன் கதை அம்சம் கொண்ட இத்திரைப்படத்தை பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இத்திரைப்படம் வெளியானது. இந்நிலையில், இன்று (5/7/2025) கோவையில் உள்ள பிராட்வே திரையரங்கில் ரசிகர்களுடன் திரைப்படம் பார்த்தார் சூர்யா விஜய் சேதுபதி.
பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “‘ஃபீனிக்ஸ்’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்போதுதான் ஒரு காட்சி பார்த்தோம், மக்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது, ரொம்பவும் ரசித்துப் பார்த்தார்கள்.
கோவை மக்கள் நன்றாகப் பழகுகிறார்கள், எப்போதுமே கோவை மக்கள் அப்படித்தான். முன்பு அப்பாவின் படத்தின் ஷூட்டிங் இங்கு நடக்கும்போது அவருடன் வந்திருக்கிறேன்.

இப்போது என்னுடைய படம் வெளியாகி, அதைப் பார்க்க வந்தது நல்ல உணர்வாக இருக்கிறது. இந்தப் படத்தின் இரண்டரை வருட ஷூட்டிங்கில் நான் இருந்திருக்கிறேன். முன்பு, ஷூட்டிங் எடுத்தபோது, இப்போது என ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விஷயம் கற்றுக்கொண்டேன். இது வெறும் தொடக்கம்தான், இன்னும் நிறைய இருக்கிறது. இந்தப் பயணமும் ரொம்ப அழகாக இருக்கிறது.
அப்பா படம் பார்த்துவிட்டு செம ஹாப்பி. மக்களுக்கு இந்த மாதிரி ஆக்ஷன் பிடித்திருக்கிறது, என்னை ஏற்றுக்கொள்கிறார்கள். அடுத்து யாராவது இயக்குநர் இந்த மாதிரி கதை எடுத்துவந்தால் பண்ணலாம். அதைத் தவிர, எந்தக் கதையாக இருந்தாலும் பண்ணத் தயார்.” என்றார்.
இவர் ஏற்கனவே தன் தந்தையுடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக ‘சிந்துபாத்’ திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.