• July 6, 2025
  • NewsEditor
  • 0

நெல்லை மாவட்டம், மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில், இந்தியாவின் லட்சியமிக்க மனித விண்வெளிப் பயணத்திட்டமான ககன்யான் திட்டத்திற்கான முக்கிய மைல்கல்லாக எஸ்.எம்.எஸ்.டி.எம் (SMSTM) மாடல் இன்ஜினின் நான்காம் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக நிறைவடைந்தது. மொத்தம் 130 வினாடிகள் நடந்த இந்த சோதனை இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சோதனை ஓட்டம்

மகேந்திரகிரி இஸ்ரோ மையம், விண்கலன்களை விண்ணில் செலுத்துவதற்குத் தேவையான கிரையோஜெனிக், விகாஷ் இன்ஜின்கள்  மற்றும் பி.எஸ்-4 இன்ஜின்களை தயாரிப்பதுடன் அவற்றின் பரிசோதனைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பயன்படுத்தப்படவுள்ள ராக்கெட்டுகளில், மனிதர்கள் விண்ணுக்குச் சென்று பாதுகாப்பாக திரும்புவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள எஸ்.எம்.எஸ்.டி.எம் மாடல் இன்ஜினின் சோதனை பல்வேறு கட்டங்களாக  நடத்தப்பட்டு வருகிறது.

நான்காம் கட்டமாக நடத்தப்பட்ட இந்த சோதனை இரு பகுதிகளாக திட்டமிடப்பட்டது. முதல் கட்டமாக 30 வினாடிகளும், இரண்டாம் கட்டமாக 100 வினாடிகளும் என மொத்தம் 130 வினாடிகள் நடத்தப்பட்டது. திட்டமிட்டபடி நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை இன்ஜின் வெற்றிகரமாக எட்டியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த சோதனையை மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தின் இயக்குனர் ஆசீர் பாக்கியராஜ் நேரில் பார்வையிட்டார்.

மகேந்திரகிரி இஸ்ரோ மையம்

இஸ்ரோ தலைவர் நாராயணன், திருவனந்தபுரம் திரவ மைய இயக்குனர் மோகன் ஆகியோர் காணொளி காட்சி வழியாக பார்வையிட்டனர். இந்த சோதனை வெற்றி, இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளதுடன், ககன்யான் திட்டத்தின் அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கு ஒரு பெரிய ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இஸ்ரோ மைய விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.   

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *