
சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரியில் கோடை சீசன் நிறைவடைந்திருக்கிறது. ஏப்ரல், மற்றும் மே மாதங்களில் மட்டும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரியைக் கண்டு ரசித்துச் சென்ற நிலையில், தற்போதும் சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக காணப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை மூலம் பராமரிக்கப்படும் பூங்காக்களில் மே மாதம் முழுவதும் கோடை திருவிழாக்கள் நடைபெற்று வந்த நிலையில், இரண்டாம் கட்ட சீசனுக்கு பூங்காக்களை தயார் செய்யும் பயணிகளை தொடங்கியிருக்கிறார்கள். இதன் ஒரு பகுதியாக நூற்றாண்டு பழைமை வாய்ந்த குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுமார் 2 லட்சம் மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணிகளை தொடங்கியிருக்கிறார்கள்.
இது குறித்து தெரிவித்த தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், ” கோடை சீசனைத் தொடர்ந்து அக்டோபர் முதல் நவம்பர் வரை நீலகிரியில் இரண்டாவது சீசன் நடத்தப்படுகிறது. ஜூலை மாதமே அதற்கான ஏற்பாடுகள் தொடங்கும். அமெரிக்கா, ஜப்பான், ஃபிரான்ஸ்,

நெதர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளை தாயகமாகக் கொண்ட சால்வியா, ஜென்னியா, டேலியா, பிகோனியா, ஃபேன்சி , டெல்ஃபினியம், பெட்டுனியா, லிசியான்தஸ் உள்ளிட்ட 75 ரகங்களில் சுமார் 2 லட்சம் மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணிகள் தொடங்கியிருக்கிறது. இரண்டாம் சீசனுக்கு வருகைத் தரும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு லட்சக்கணக்கான மலர்கள் விருந்து படைக்கும் ” என்றனர்.