• July 6, 2025
  • NewsEditor
  • 0

ராஜஸ்தான் போலீஸ் அகாடமி உள்ளேயே இரண்டு ஆண்டுகள் சப்-இன்ஸ்பெக்டர் போல மாறுவேடம் போட்டு திரிந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் பயிற்சி அமர்வுகளில் பங்கேற்றுள்ளார், அதிகாரப்பூர்வ சீருடைகள் அணிந்து வலம் வந்திருக்கிறார், மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் புகைப்படங்கள் கூட எடுத்திருக்கிறார்.

எனினும் வகுப்பறைகளுக்குள்ளும், உள் பயிற்சி அரங்குகளுக்குள்ளும் நுழைவது இயலாத காரியம் எனத் தெரிவித்துள்ளது ராஜஸ்தான் போலீஸ் அகாடமி.

மூளி தேவி

மூளி தேவி என்ற போலி அடையாளம்

ஜெய்பூரில் குற்றவாளி மோனா புகாலியா (எ) மூளிக்கு 2023ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது முதல் தலைமறைவாக இருந்திருக்கிறார். கடந்த வாரம்தான் பிடிபட்டுள்ளார்.

2 ஆண்டுகளுக்கு முன்னர் தங்கியிருந்த அறையை காவல்துறையினர் சோதனையிட்டபோது 7 லட்சம் பணம், 3 சீருடைகள், ராஜஸ்தான் போலீஸ் அகாடமி தேர்வு தாள்கள், போலி அடையாள அட்டை மற்றும் போலி ஆவணங்களைக் கண்டெடுத்துள்ளனர்.

தற்போதைய விசாரணையில் மூளி ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் மாவட்டத்தில் உள்ள நிம்பா கே பாஸ் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. இவரது தந்தை ஒரு லாரி ஓட்டுநர்.

2021ம் ஆண்டு துணை ஆய்வாளர் ஆட்சேர்ப்பு தேர்வில் தோல்வியடைந்ததால் மூளி தேவி என்ற பெயரில் போலி ஆவணங்களைத் தயாரித்துள்ளார். சமூக ஊடகங்களில் தான் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் எனப் பதிவு செய்து வலம்வந்துள்ளார்.

பின்னர் புதிதாக பணியில் சேரும் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான வாட்ஸ்அப் குழுவில் ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் சேர்க்கப்பட்ட முந்தைய பேட்ச் அதிகாரி என்ற போர்வையில் ராஜஸ்தான் போலீஸ் அகாடமியில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

Rajasthan Police Academy

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு முழு சீருடையில் ராஜஸ்தான் போலீஸ் அகாடமியின் அணிவகுப்பு மைதானத்தில் தினசரி காட்சியளித்து வந்துள்ளார். அங்கு நடந்த பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார். உயர் அதிகாரிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

சீருடையில் தன்னை ஒரு காவலர் போல காட்டிக்கொண்டு சமூக வலைத்தளங்களில் மோட்டிவேஷனல் ரீல்ஸ்களைப் பதிவிட்டு வந்துள்ளார். காலவராக முயற்சிக்கும் பலருக்கு அட்வைஸ்களை அள்ளி வழங்கியுள்ளார்.

இவரது நடவடிக்கை சில பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு சந்தேகம் ஏற்படுத்தவே, உயர் அதிகாரிகளிடம் எடுத்துரைத்துள்ளனர். தப்பியோடி தலைமறைவானவர் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடகமாடியது ஏன்?

தொடக்கநிலை விசாரணையிலேயே தான் போலி ஆவணங்கள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டுள்ளார் புகாலியா. 4 சகோதரிகளுடன் பிறந்த அவர், தனது குடும்பத்தை திருப்திபடுத்துவதற்காக இப்படி செய்ததாக கூறியுள்ளார். ஆனால் அவர் காவல்துறை தொடர்பான அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

“மூளி தேவியாக போலீஸ் அகாடமியில் நுழைந்த அவர் ஐபிஎஸ் அதிகாரிகளுடன் ரீல்ஸ் செய்துள்ளார், கூடுதல் காவல் துறை இயக்குநர்களுடன் டென்னிஸ் விளையாடியுள்ளார், மக்களை மிரட்டி பணம் பறித்துள்ளார்… மொத்த உலகத்தையும் சரிபார்க்கும் காவலர்கள், சொந்த துறையில் விடுவதா? இது வெறும் குறைப்பாடு அல்ல, நிறுவன சிதைவின் வெளிப்பாடு” என விமர்சித்துள்ளார் சமூக செயற்பாட்டாளர் விஜய் கும்பர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *