
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நேற்று நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். அதில் பாமக தலைவர் அன்புமணி பேசியதாவது…
“தமிழ்நாட்டின் பூர்வக்குடி மக்கள் என்றால், அவர்கள் பட்டியிலின மக்கள், வன்னிய மக்கள் மற்றும் மீனவ மக்கள் ஆவார்கள். மற்ற சமூதாயத்தினர் எல்லாம் இருக்கிறார்கள். ஆனால், அதிகளவில் இருக்கும் மக்கள் நாம் தான்.
நம்மை இவ்வளவு காலம், படிப்பறிவு இல்லாமல், பொருளாதார முன்னேற்றம் இல்லாமல், வேலைவாய்ப்பு இல்லாமல், மதுவிற்கு அடிமையாக்கி, தொடர்ந்து நம்மை வாக்கு வங்கிகளாக மட்டும் நம்மை ஆண்ட, ஆட்சி செய்து வருகிற அமைப்புகள் வைத்திருக்கிறார்கள்.
இது என்னுடைய கருத்து மட்டுமல்ல. நண்பர் ஆம்ஸ்ட்ராங்கின் ஆழமான கருத்து.
234: 62 – 42 தொகுதிகள்
தமிழ்நாட்டில், எந்த தொகுதிகளில் எந்த சமுதாய மக்கள் எவ்வளவு இருக்கிறார்கள் என்ற தரவு எனக்கு சமீபத்தில் கிடைத்தது. அந்தத் தரவுகளின் படி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்ற தொகுதிகளில், 62 சட்டமன்ற தொகுதிகளில் அதிகம் இருப்பது வன்னியர் சமுதாயம். 42 சட்டமன்ற தொகுதிகளில் இருப்பது பட்டியிலின சமுதாயம்.
இந்தத் தரவுகளை எடுத்து பார்த்தால், தமிழ்நாட்டில் 103 தொகுதிகளில் இந்த இரு சமுதாயம் சேர்ந்தாலே, நாம் ஆட்சிக்கு வரலாம்… நாம் ஆளலாம். இது அடிப்படை உண்மை.
ஆனால், காலம் காலமாக நம்மை பிரித்து, நம்மிடையே மோதல்போக்கை உண்டாக்கி இருக்கிறார்கள். இந்த இரு சமுதாயங்களும் வாக்கு வங்கிகளாக மட்டும் பார்க்கப்படுகின்றன.

அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ் வழியில்…
இதற்கு தான் மருத்துவ ஐயா பாமக கட்சியைத் தொடங்கினார். அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ் வழியில் எங்களை எங்கள் ஐயா வழிநடத்தி கொண்டிருக்கிறார்கள். அதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.
ஆனால், இடையில் சில கட்சிகள் பிரித்து ஆள்கிறார்கள்.
நமக்கு ஆட்சி அதிகாரம் வேண்டும். நமக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் பதவி வேண்டாம். நமக்கு சமூக நீதி வேண்டும்.
தொடங்கப்பட்டுள்ள இயக்கத்திற்கு எங்களுடைய முழு ஆதரவு உண்டு.
திமுகவிற்கு அதிக தொகுதியை கொடுத்த சமுதாயங்கள்
இன்றைய ஆளும் கட்சிக்கு அதிக சட்டமன்ற தொகுதியை கொடுத்த சமுதாயம் வன்னியர் சமுதாயம் (23), அடுத்த அதிக தொகுதியை கொடுத்த சமுதாயம் பட்டியிலின சமுதாயம் (21). இந்த இரண்டு சமுதாயங்கள் 44 சட்டமன்ற உறுப்பினர்களை கொடுத்துள்ளார்கள்.
அவ்வளவு சட்டமன்ற உறுப்பினர்களைக் கொடுத்த சமுதாயத்திற்கு திமுக ஒன்றும் செய்யவில்லை. அவர்களது அமைச்சரவையில் 32, 34, 35 இடத்தை தான் பட்டியிலின அமைச்சர் பெற்றிருக்கிறார்கள்.
எங்களுக்கு கிடைத்த முதல் அமைச்சர் பதவியை, நாங்கள் 1998-ம் ஆண்டு தலித் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு தந்தோம். எங்களுக்கு பிறகு, 1999-ம் ஆண்டில் தான், மத்தியில் அமைச்சர் பதவியை தலித் மக்களுக்கு கொடுத்தார்கள்.” என்றார்.