Doctor Vikatan: ஏதேனும் உடல்நலக் கோளாறுகளுக்காக மருந்து, மாத்திரைகள் எடுக்கும்போது சிறுநீரின் நிறம் மாறுவது ஏன்? இது சாதாரணமானதுதானா அல்லது ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி.
பொதுவாகவே நம் சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில்தான் இருக்க வேண்டும். இதை straw-colour அல்லது pale yellow colour என குறிப்பிடுவதுண்டு. சில மருந்துகளை எடுக்கும்போது அவற்றில் உள்ள கலரிங் ஏஜென்ட்டுகள், நிறமிகளின் காரணமாக, சிறுநீரின் நிறம் மாறலாம்.
சில வகை மருந்துகளை எடுக்கும்போது சிலருக்கு அடர் மஞ்சள் நிறத்திலோ, சிவப்பு நிறத்திலோ, பிங்க் நிறத்திலோ கூட சிறுநீர் வெளியேறலாம். மருந்துகளின் தன்மையைப் பொறுத்து ஆரஞ்சு அல்லது வயலட் நிறத்தில்கூட சிறுநீர் வெளியேறுவதைப் பார்க்கலாம். மருந்துகள் எடுக்கும்போது அவற்றிலுள்ள நிறமிகளும் பிற சேர்க்கைகளும் நம் கல்லீரலில் நடக்கும் ரசாயன மாற்றத்தில் உருமாறி, ரத்தத்தில் கலந்து சிறுநீர் வழியே வெளியேறும். இப்படி சிறுநீர் நிறம் மாறி வெளியேறுவதால் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
மருந்துகள் எடுக்கும்போது மட்டும் சிறுநீரின் நிறம் மாறி வெளியேறுகிறதா அல்லது சாதாரணமாகவே அப்படித்தான் வெளியேறுகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
ஒருவேளை சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியேறுகிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி ரத்தம் கலந்து வெளியேறினால் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். மருந்துகளை நிறுத்தியதும் சிறுநீர் வழக்கமான நிறத்துக்கு மாறிவிடும் என்பதால் இந்த நிறமாற்றம் தற்காலிகமானதுதான். அது குறித்துக் கவலை கொள்ள வேண்டாம். ஆனால், மருந்துகளை நிறுத்திய பிறகும் அதே நிறம் தொடர்ந்தால் மட்டும் மருத்துவ ஆலோசனை பெறலாம்.
ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல, எந்த மருந்துகளும் எடுக்காமலேயே சிறுநீர் சிவப்பு, ஆரஞ்சு, கோலா நிறம், கறுப்பு நிறத்தில் எல்லாம் வெளியேறினால், அதை அலட்சியப்படுத்த வேண்டாம். மருத்துவரை அணுகி, சிறுநீர்ப் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு பிறகு அது என்ன பிரச்னை, என்ன சிகிச்சை தேவை என்பது குறித்து முடிவு செய்யலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.