
`சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு தலைவர், கவிஞர் மனுஷ்ய புத்திரன் அவர்களை சந்தித்து சமீபத்திய நிகழ்வுகள், அரசியல், கவிதை, புத்தகங்கள் என பல விஷயங்கள் குறித்து உரையாடினோம்…
“சமீபத்தில் நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தனவே, குறிப்பாக மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே நூல்கள் வாங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது?”
“ இது ஒரு தவறான புரிதலில் இருந்து எழுந்த குற்றச்சாட்டு. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பொது நூலகத் துறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன. இவற்றைச் சரி செய்ய வேண்டிய பொறுப்பு எங்களுக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக வெளிப்படைத் தன்மை மிக்க ஒரு நூல் கொள்முதல் கொள்கையை உருவாக்கினோம். அதன்படி விண்ணப்பிக்கப்பட்ட நூல்களை அதற்கான பிரத்தியேக இணையத்தில் பதிவேற்றி அந்தந்த நூலகங்களில் இருந்து அமைக்கப்பட்ட குழுக்களே தங்களுக்குத் தேவையான நூல்களை தேர்வு செய்யும் முறையைக் கொண்டு வந்தோம்.
அதன்படி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிகள் கொள்முதல் செய்யப்பட்ட நூல்களும் இருந்தன. ஐம்பதுக்கும் குறைந்த பிரதிகள் கொள்முதல் செய்யப்பட்ட நூல்களும் இருந்தன. முதல்முறையாக சிறிய, நடுத்தர, பெரிய பதிப்பாளர்கள் என அனைவருக்கும் பரவலான நூலக ஆணைகள் கிடைத்திருக்கின்றன. மேலும் இந்த முறை குறைவான கொள்முதல் செய்யப்பட்ட நூல்கள் அடுத்த காலாண்டிலும் பிற நூலகங்கள் வாயிலாக தேர்வு செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது. இது ஒரு தொடர் கொள்முதல் முறை. எனவே, இதைப்பற்றிச் சொல்லப்படும் விமர்சனங்கள்அனைத்தும் மேம்போக்கானவை என்று கருதுகிறேன்.”
“AI போன்ற துறைகள் வேகமாக வளர்ந்து வரும் சூழலில் அச்சிட்ட நூல்களுக்கும், நூலகங்களுக்கும் எதிர்காலம் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?”
“நிச்சயமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் அதற்கு நூலகங்களின் தன்மை மாறவேண்டும். நூலகங்கள் நூல்களை அடுக்கி வைக்கும் இடமாக இல்லாமல் அவை கலாச்சார மையமாக மாறவேண்டும். கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், விவாதங்கள் நடைபெறும் இடமாகவும், புதிய அறிவுத்துறை சார்ந்து பயிற்சி அளிக்கும் இடமாகவும் திகழவேண்டும்.
அண்ணா நூற்றாண்டு நூலகம், தேவநேய பாவாணர் மாவட்ட மைய நூலகம் போன்றவற்றில் இத்தகைய முயற்சிகளை ஏற்கனவே வெற்றிகரமாக மேற்கொண்டு இருக்கிறோம். வெளிநாடுகளில் நூலகங்களில் print on demand முறையில் ATM இயந்திரம் போல புத்தகங்களை உடனுக்குடன் உருவாக்கி விற்பனை செய்யும் முறைகள் எல்லாம் வந்துவிட்டன. அதனை நாமும் பின்பற்றும் காலம் வெகுதொலைவில் இல்லை.”

“உங்க நூலகப் பணிகள் உங்களது எழுத்து பணிகளுக்கு எந்த விதத்தில் உதவியாக இருக்கின்றன?”
“எந்த வேலையுமே எழுத்து வேலைக்கு உதவியாக இருக்காது. எழுதுவதற்கு நிறைய ஓய்வும் சோம்பலும் தேவை. கடந்த டிசம்பரில் இருந்தே நூலகப் பணிகள், மாவட்ட புத்தக கண்காட்சிகள் என கடுமையான பணிசுமைகள் இருந்தன. எழுதுவதற்கான நேரம் மிகவும் சுருங்கிவிட்டது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சற்றுக் குறைவாகவே எழுதியிருக்கிறேன். ”
“ஊடக விவாதங்களில் உங்களை அதிகம் பார்க்க முடிவதில்லையே ஏன்?”
“நேரமின்மைதான் மிக முக்கிய காரணம். ஆயினும் மிக முக்கிய விவாதங்களில் பங்கேற்று வருகிறேன். 2012 இல் இருந்து ஊடக விவாதங்களில் பங்கேற்கிறேன். சமீப காலத்தில் ஊடக விவாதங்களின் தரம் வெகுவாகக் குறைந்துவிட்டது. மேலும் யூடியூபர்களோடு தொலைக்காட்சி போன்ற மைய நீரோட்ட ஊடகங்கள் போட்டியிடுவது துரதிஷ்டவசமானது.”
“நூலக ஆணைக்குழு தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து பல செயல்களை மாணவர்களுக்காக செய்துவருகிறீர்கள். அதன் மூலமாக மாணவர்களிடம் ஏற்பட்ட மாற்றங்களை எப்படி பார்க்கிறீர்கள்?”
“மாற்றங்களை உடனே அனுமானிக்க முடியாது. ஆனால் எல்லாத்துறை சார்ந்தும் நாங்கள் நடத்துகின்ற பயிலரங்கிற்கு அதிக அளவில் மாணவர்கள் வருகிறார்கள் என்பதையே பெரும் மாற்றமாக கருதுகிறேன். வாசிப்பு பழக்கத்தை இளைங்ஞர்களிடம் மேம்படுத்துவதே எங்களின் நோக்கம்.”
“அதிகமாக உங்கள் கவிதைகள் காதலை மட்டுமே பேசுகிறதே ஏன்?”
“நீங்கள் காதலில் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருப்பதால், அத்தகைய கவிதைகளே உங்கள் கவனத்தை ஈர்க்கின்றன என்று நினைக்கிறேன் ( சிரிக்கிறார் ) . நான் காதலை எழுதுகிறேன் என்பதை விட நம் காலத்தில் ஆண் பெண் உறவுகள் இடையே நிகழும் மாற்றங்களையும் குழப்பங்களையும் எழுதுகிறேன் என்பதே உண்மை .”
“தற்காலத்தில் பதிப்பு துறையில் இருக்கின்ற முக்கிய பிரச்சினைகள் என்ன? ”
“தமிழில் வரும் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றன. தமிழ்நாடு முழுக்க புத்தக கண்காட்சிகள் நடக்கின்றன. ஆனால் அதற்கேற்ற விற்பனை அதிகரிக்கவில்லை. பதிப்பாளர்கள் தரமான புத்தகங்களை பதிப்பிக்க முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மார்க்கெட்டிங் செய்வதில் சமூக ஊடகங்களை திறம்பட பயன்படுத்த வேண்டும்.”
“அதிகம் பேசப்படுகிற கவிஞராக இருந்த சமயத்தில் அரசியலுக்கு வந்ததால் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நினைக்கிறீர்களா?”
“எல்லாமே வெவ்வேறு உலகங்கள். என்னை அரசியலுக்காக பின்பற்றுபவர்களும் கவிதைக்காக பின்பற்றுபவர்களும் ஒன்று அல்ல. அதேசமயம் சமூகத்தையும் வாழ்வையும் புரிந்து கொள்வதற்கு அரசியல் எனக்குப் பெரிதும் பயன்படுகிறது. அரசியலிலுக்கு வந்த பிறகுமே நான் நிறைய எழுதியிருக்கிறேன்.”
– ரா.விசாலாட்சி