
ஆளுங்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் கரிகாலனை (சம்பத்) கொலை செய்த குற்றத்துக்காக, சிறுவர் கூர்நோக்கு பள்ளியில் அடைக்கப்படுகிறார், 17 வயது சூர்யா (சூர்யா சேதுபதி). அவரை, அந்த பள்ளியிலேயே தீர்த்துக்கட்ட ஆட்களை அனுப்புகிறார், கொல்லப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினரின் மனைவி மாயா (வரலட்சுமி சரத்குமார்). ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த சூர்யா, சட்டப்பேரவை உறுப்பினரைக் கொன்றது ஏன்? அவருடைய ஆட்களிடம் இருந்து அவரால் தப்பிக்க முடிந்ததா? என்பது கதை.
இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் அனல் அரசு ஸ்டன்ட் இயக்குநர் என்பதால் ஒரு பழிவாங்கும் கதையை, ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்க நினைத்திருக்கிறார். அதற்கு ஏற்ற மாதிரி கதையை ஊறுகாய் போல வைத்துக் கொண்டு ஆக்‌ஷன் காட்சிகளை அதிரடியாகத் தந்திருக்கிறார். மிரட்டுகிற அக்காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் தொடர்ந்து வருகிற, அதே போன்ற காட்சிகளும் தெறிக்கும் ரத்தமும் ஒரு கட்டத்தில் சோர்வடைய வைக்கின்றன.