• July 6, 2025
  • NewsEditor
  • 0

சிட்டி ஜெயபுரம் என்ற புனைவு கிராமம். அதன் தலைவர் இறந்துவிடுகிறார். அவரது மறைவுக்குப் பிறகு, அவரின் மகளான அபூர்வா (கீர்த்தி சுரேஷ்) ஊர் தலைவர் நாற்காலியில் அமர்த்தப்படுகிறார். ஊர் தலைவர் பதவியில் துளியும் நாட்டமில்லாத அபூர்வாவுக்கு, குடும்ப கௌரவம், பரம்பரை மரியாதை என அழுத்தம் கொடுக்கிறார்கள்.

வீட்டாரின் பிடிவாதத்தைத் தொடர்ந்து பதவியை ஏற்றுக்கொண்டு, முதல் முறையாக மக்களின் குறைகளைக் கேட்கச் செல்கிறார். அபூர்வாவுக்கு வேண்டுமென்றே இடையூறு விளைவிக்க, ஊரின் மற்ற பெரியவர்கள் பல சவாலான கேள்விகளைக் கேட்கிறார்கள். தந்தை சொல்லிக்கொடுத்த விஷயங்களை வைத்து, அவர்களுக்கு லாவகமான பதில்களையும் கொடுத்துவிடுகிறார்.

கீர்த்தி சுரேஷ்

ஆனால், அந்த ஊரில் இடுகாட்டில் பணிபுரிந்து வரும் சின்னா (சுகாஸ்), “ஊரில் இடுகாட்டில் நான்கு நபர்களை மட்டுமே புதைக்க இடமிருக்கிறது. அதற்கு மேல் என்ன செய்யவது?” எனச் சிக்கலான கேள்வி ஒன்றைக் கேட்கிறார்.

இதற்கு பதில்சொல்ல முடியாமல் திக்குமுக்காடி நிற்கிறார் அபூர்வா. ஊரின் மற்ற பெரிய தலைகட்டுகளும் தங்களுக்கு இந்த ஊரின் இடுகாட்டில்தான் இடம் வேண்டும் என அடம் பிடிக்கிறார்கள். அபூர்வா, வேறொரு இடுகாட்டு இடத்தைக் கண்டுபிடித்தாரா? பிரச்னையைச் சமாளிக்க என்னென்ன சேட்டைகள் செய்கிறார் என்பதே அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் இந்த ‘உப்பு காப்புராம்பு’ என்ற தெலுங்கு படத்தின் கதை.

பெரிதாக ஊர் விவரம் தெரியாத அப்பாவியான தோற்றத்தில் களமிறங்கி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். மூக்குக் கண்ணாடியை உயர்த்தியபடி, படம் முழுக்க வெள்ளந்தியான உடல்மொழியை எங்கும் தவறவிடாமல் கச்சிதமாகத் தொடர்ந்திருக்கிறார்.

ஆனால், சில இடங்களில் வெளிப்படும் அந்த ஓவர் ஆக்டிங்கை தவிர்த்திருக்கலாம். ஊர் தலைவருடன் கலகலப்பு செய்யும் இடம், அம்மாவிற்காக இடுகாட்டில் ஒரு இடம் மறைத்து அரும்பாடு படும் இடம் என தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார் சுகாஸ்.

சுகாஸ்

பிரச்னைகள் விளைவிக்கும் வழக்கமான டெம்ப்ளேட் கதாபாத்திரத்தில் வந்திறங்கி, குறையில்லாத நடிப்பை நடிகர் ஷத்ருவும், பாபு மோகனும் கொடுத்திருக்கிறார்கள். சிறிது நேரம் வந்தாலும், ஃபன் ஜோனில் நடித்து மனதில் பதிகிறார் நடிகர் சுபலேகா சுதாகர்.

இடுகாடு, பஞ்சாயத்து மேடை எனப் பின்தொடர்ந்து, எளிமையான ப்ரேம்கள் மூலம் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் திவாகர் மணி. அமைக்கப்பட்ட லைட்டிங்கும் கதை பயணிக்கும் களத்திற்கேற்ப நம் மனநிலையைத் தயார்படுத்துகிறது.

படத்தொகுப்பாளர் ஶ்ரீஜித் சாரங், காமெடி, எமோஷன் எனக் காட்சிகளை அடுத்தடுத்து அடுக்கிய இடங்களில் கவனம் காட்டியிருக்கலாம். அதுபோலவே, இரண்டாம் பாதியில், ஒரே காட்சிகள் லூப் மோடில் ரிப்பீட் அடித்து சோர்வாக்கும் காட்சிகளையும் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.

இசையமைப்பாளர் ஸ்வீகர் அகஸ்தியின் ஜாலியான பின்னணி இசை, டல் அடிக்கும் காட்சிகளையும் பிரகாசிக்க வைத்திருக்கிறது. பாடல்களில், ஆண்டனி தாசன் பாடியிருக்கும் டைட்டில் டிராக் குட் ஒன்!

இடுகாட்டில் இருக்கும் பல வண்ணங்களிலான கல்லறைகள், கிராமத்து வீடுகள், அங்கிருக்கும் கதவுகள் என கலை இயக்குநர் கவனிக்கத்தக்கப் பணியைச் செய்து கவனம் ஈர்க்கிறார்.

புனைவு கிராமம், அங்கிருக்கும் மனிதர்கள் செய்யும் சேட்டைகள் என திரைக்கதை நிதானமாக நகரத் தொடங்குகிறது. படத்தின் சில காமெடிகள் சரியாக க்ளிக் ஆக, பெரும்பாலானவை படத்தைக் கவலைக்கிடமான நிலைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, இரண்டாம் பாதியின் அடர்த்தியில்லாத திரைக்கதை, படத்தைப் பள்ளத்திற்குள் தள்ளி தத்தளிக்க வைத்திருக்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல், கிணற்றிற்குள் ரவுண்டு அடிக்கும் வண்டிகளைப் போல காட்சிகள் ஒரே கோட்டில் வட்டமடிக்கின்றன. அப்படி ரிப்பீட் அடிக்கும் காட்சிகளும் உப்பு, காரம் என எந்த சுவையும் இன்றி நகர்வது டோட்டல் போர்!

காமெடியென நம்மை சோக நிலைக்குக் கொண்டுச் செல்லும் காட்சிகளின் சுவடுகள் மறைவதற்குள், சட்டென எமோஷனல் காட்சிகளுக்கு ஜம்ப் அடித்து இன்னும் சோதிக்க வைப்பது நியாயமா? சுவாரஸ்யத்தை அழகாக மெருகேற்றுவதற்கான களமும் ஒன் லைனும் இருந்தும், அதைக் குழி தோண்டி புதைத்து வீணடித்திருக்கிறார்கள்.

அதே சமயம், சாதிய பாகுபாடு, தீண்டாமை கொடுமை ஆகியவற்றை தேநீர் குவளை, துருப்பிடித்த நாற்காலி மூலம் உணர்த்தியதற்கு பாராட்டுகள். அதுபோல, பெற்றோர்களின் தொழிலைப் பிள்ளைகளின் விருப்பமின்றி, அவர்களின் கல்வியைப் பறித்து திணிக்கப்படும் வரலாற்றையும் இந்தப் படைப்பின் கதாபாத்திரங்களின் வழியே ஆழமாகச் சொன்ன இயக்குநர் கவனிக்க வைக்கிறார்.

சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்கான இடமிருந்தும் தவறவிட்ட இயக்குநர், பிரச்னைகளை சரிசெய்திருந்தால், இடுகாட்டில் போடப்பட்ட ஹவுஸ்ஃபுல் பதாகையை படத்திற்கும் போட்டிருக்கலாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *