
ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பு சம்பவத்தை மையப்படுத்திய ‘The Hunt – The Rajiv Gandhi Assassination Case’ என்ற வெப் சீரிஸ் ‘சோனி லிவ்’ ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.
ராஜீவ் காந்தியின் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து தயாரிப்பாளர் அனிருத்யா மித்ரா எழுதிய ’90 டேஸ்’ என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து இந்த சீரிஸை எடுத்திருக்கிறார் பாலிவுட் இயக்குநர் நாகேஷ் குக்குனூர்.
இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தின் விசாரணையில் ஈடுபட்ட டி.எஸ்.பி ரகோத்மனின் கதாபாத்திரத்தில் நடிகர் பகவதி பெருமாள் நடித்திருக்கிறார். இந்த சீரிஸின் வெளியீட்டையொட்டி அவருடன் ஒரு குட்டி சாட் போட்டோம்.
“ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பு சம்பவத்தின் விசாரணையில் ஈடுபட்ட டி.எஸ்.பி ரகோத்மனின் கதாபாத்திரத்தில் நீங்கள் நடித்திருக்கிறீர்கள். இந்த சீரிஸுக்கு நீங்கள் கமிட்டானதும் இந்த வழக்கு தொடர்பான விஷயங்களை தேடி படித்தீர்களா? விசாரணையில் குழுவில் இருந்தவர்களை சந்தித்தீர்களா?”
“இந்த சீரிஸுக்கு கமிட்டானதும் நீங்க சொல்ற விஷயங்களை நான் பண்ணல. அதற்கான தேவையும் அமையல. சொல்லப்போனால், இந்த சீரிஸுக்குள் நான் வருவதற்கு முன்பே ரகோத்மன் சாருடைய நேர்காணல்களையெல்லாம் நான் யூட்யூபில் பார்த்திருக்கேன். தமிழர்களாகிய நமக்கு விடுதலை புலிகள் பற்றியும், ஈழத்தமிழர்கள் பற்றியும், ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பு சம்பவத்தைப் பற்றியும் நமக்கு தெரிஞ்சிருக்கும். நானும் புத்தகங்கள், காணொளிகள்னு பார்த்து படிச்சு அந்த சம்பவம் தொடர்பாக நிறைய விஷயங்கள் தெரிஞ்சு வச்சிருந்தேன். நான் எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சதுக்குப் பிறகுதான் இந்த வாய்ப்பு எனக்கு வந்தது. இந்த வாய்ப்பு எனக்கு வந்ததும் ரகோத்மன் சாரை மீட் பண்ணனும்னு நினைச்சேன். பிறகுதான் அவர் இறந்த செய்தியை எனக்குச் சொன்னாங்க.
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை முடிந்தப் பிறகுதான் இந்த சீரிஸின் பணிகளை நாங்க தொடங்கினோம். இப்படியான ரியல் லைஃப் கதாபாத்திரங்கள்ல நடிக்கும்போது சில விஷயங்கள்ல கவனமாக இருந்தாகணும். ரகோத்மன் சாரோட உடல்மொழி நமக்கு தெரியாது, அவர் எப்படியான விஷயங்களை செய்ய விரும்புவார், எப்படி நடப்பார்னு எந்த விஷயமும் நமக்கு தெரியாது. அவருடைய நேர்காணல்களுக்கு நம்முடைய பார்வைக்கு இருக்கு. ஒரு வேளை அவர் பயங்கர ஜாலியான நபராக இருந்தால், கதாபாத்திரமாக இந்தக் கதைக்கு அது தேவைப்படாது. இயக்குநர் நாகேஷ், இந்த சம்பவம் தொடர்பான ஒரு புத்தகத்தை மையப்படுத்திதான் எடுத்திருக்கார். கீர்த்தி சுரேஷ், ‘நடிகையர் திலகம்’ திரைப்படத்துல சாவித்ரி அம்மாவாக நடிச்சிருப்பாங்க. அவங்க சாவித்ரி அம்மாவாக தேர்ந்த நடிப்பை மட்டுமேதான் கொடுத்திருப்பாங்க.”

“டி.எஸ்.பி ரகோத்மனாக உங்களை தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை இயக்குநர் நாகேஷ் கூறினாரா?”
“நான் பாலிவுட்ல நடிச்சிருந்த ‘மோனிகா, ஓ மை டார்லிங்’ படத்துக்கு ஒரு காஸ்டிங் ஏஜென்சிதான் என்னை தேர்வு பண்ணினாங்க. அதே காஸ்டிங் ஏஜென்சிதான் இந்தப் படத்துக்கும் வேலை பார்த்திருக்காங்க. இப்போ ப்ரோமோஷன் சமயத்துலதான் இயக்குநர் இன்னொரு விஷயத்தை என்கிட்ட சொன்னாரு. ரகோத்மன் கேரக்டருக்கு என்னை மட்டும்தாம் ஒரே சாய்ஸாக இயக்குநரிடம் கொடுத்தாங்களாம். ஆனா, காஸ்டிங் ஏஜென்சிக்கு நான் இந்தி, இங்கிலீஷ்னு எல்லா மொழிகளிலும் ஆடிஷன் பண்ணி அனுப்பினேன். ஆனா, இயக்குநருக்கு என்னை மட்டும்தான் சாய்ஸாக அனுப்பியிருக்காங்க. இந்த சீரிஸ்ல நடிகர்கள் தேர்வு ரொம்பவே முக்கியமா ஒன்றாக இருக்கும். 90 சதவீதம் நிஜ மனிதர்களோட தோற்றத்திற்கு ஒன்றிப் போகிற மாதிரியான நடிகர்களைதான் தேர்வு பண்ணியிருக்காங்க. அவர்களே மீண்டும் வந்த மாதிரியே இருக்கும். சிவராசன் கதாபாத்திரத்துல ஒரு நடிகர் நடிச்சிருக்கார். அப்படியே சிவராசன் மாதிரியே இருப்பாரு.”
“ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக நீங்கள் படித்திருப்பதாக பகிர்ந்திருந்தீர்கள். இருப்பினும், இந்தக் கதையைப் படித்தப் பிறகு உங்களுக்கு அந்தச் சம்பவம் தொடர்பாக பல ஆழமான உண்மைகளும் தெரிய வந்திருக்கும். அப்படி எந்த விஷயங்களை கேள்விப்படும்போது நீங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டீர்கள்?”
“ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பு சம்பவம் மே 21-ம் தேதி இரவு நிகழ்ந்தது. ஆனால், அன்று காலையிலேயே இலங்கையின் தூதரகத்திற்கு தொலைபேசியில அழைத்து ‘ராஜீவ் காந்தி உயிருடன் இருக்கிறாரா?’ எனக் கேட்டிருக்கிறார் ஒருவர். இப்படியான ஃபேக் அழைப்புகள் பலவும் வரும்தான். ஆனால், அந்த அழைப்பை அவர்கள் பெரிதளவுல பொருட்படுத்தாமல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் இருந்திருக்காங்க. ராஜீவ் காந்தியின் மறைவுக்கு அடுத்த நாள்தான் இந்த விஷயத்தை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிச்சிருக்காங்க. உடனடியாக தெரிவிக்க வேண்டிய இந்த விஷயத்தை அவங்க பொருட்படுத்தாமல் விட்டுடாங்க. அந்த சமயத்துல யார் அந்த அழைப்பை எடுத்தாங்க, அவங்க ஏன் அதிகாரிகளுக்கு தெரிவிக்கலைனு இந்த வழக்குல பல குறைகள் இருக்கு.
நிறையப் பேரை தண்டிக்கணும், தண்டிக்காமல் விட்டிருக்காங்க. அதே மாதிரி, ராஜீவ் காந்தி விசாகப்பட்டினத்தில் இருந்து ஶ்ரீபெரும்புதூருக்கு கிளம்பும்போது அவருடைய ஹெலிகாப்டர் பழுதாகியிருக்கு. அந்த நேரத்துல, ஹெலிகாப்டரின் பைலட் பழுது பார்க்க நேரமெடுக்கும்னு அன்றைய திட்டங்களை ரத்து செய்யவும் சொல்லியிருக்காரு. அதுபோல, அவருக்கு கொலை மிரட்டல் இருப்பதாகவும் மே 21-ம் தேதிக்கு முன்பே தெரிவிச்சிருக்காங்க. இந்த மாதிரியான விஷயங்களை பொருட்படுத்தாமல் அப்போதே ஹெலிகாப்டரை பழுது பார்த்து கிளம்பிட்டாரு. அதுனாலதான் அன்னைக்கு 6.30 மணிக்கு தொடங்க வேண்டிய கூட்டம் இரவு 10.30 மணிக்கு தொடங்குச்சு. இப்படியான விஷயங்களை துணுக்குகளாகதான் படிச்சிருக்கேன். முழுக் கதையை கோர்வையாக படிக்கும்போது பெரும் தாக்கத்தை கொடுத்துச்சு. நம்ம ஊர்ல நடந்த மிகப்பெரிய குண்டு வெடிப்பு சம்பவம்னா இதுதான்.”

“ராஜீவ் காந்தி கொலை வழக்கு மிகவும் சென்சிடிவான விஷயம். படத்தில் நடிக்க கால் வந்தப் பிறகு இப்படியான கதையில், கதாபாத்திரத்தில் நாம் நடிக்க வேண்டும் என தயக்கமோ, சந்தேகமோ உங்களுக்குள் வந்ததா?”
“ஒரு நடிகருக்கு இப்படியான வாய்ப்புகள் வருவது ரொம்பவே அரிது. இதை நல்லபடியாக பண்ணிடனும்தான் எனக்குள்ள பதற்றம் இருந்தது. மற்றபடி, இந்தக் கதாபாத்திரத்துல நடிக்கணுமா, வேண்டாமானு துளியும் யோசிக்கவே இல்லை. மற்ற விஷயங்கள்ல இயக்குநர்தான் பொறுப்பாக இருக்கணும். ஒரு நடிகராக எனக்கு கொடுக்கப்படும் வேலையைதான் நான் பண்ணியாகணும்.”
“இந்த வழக்கில் 90 நாட்கள் நடந்த விசாரணை குறித்து நீங்கள் முழுமையாக அறிந்துக் கொண்டப் பிறகு, இந்த வழக்கு பற்றிய உங்களுடைய பார்வை எந்தளவுக்கு மாறியது?”
“என்னுடைய பார்வை எதுவும் மாறல. ஆனா, இருப்போ இருக்கிற டெக்னாலஜி அப்போ கிடையாது. இந்த வழக்கிற்காக எல்லா இடங்களுக்கும் அவங்களாகவே பயணிச்சிருக்காங்க. விசாரணைக்காக ஒரு பகுதிக்கு போனால் வீடியோ எடுக்க முடியாது. அப்போ, தூக்கம் இல்லாமல், போதிய ஆட்கள் உதவி இல்லாமல் சிறப்பு புலனாய்வுக் குழுவைச் சேர்ந்த ஏழு பேர் இந்த வழக்கை 90 நாட்கள்ல முடிச்சிருக்காங்கனா, அது உண்மையாகவே மிகப்பெரிய சாதனை. அவங்க எப்படியான ப்ரஷரை கையாண்டிருப்பாங்கனு உணர முடியுது. காவல் துறையினர் நினைச்சிட்டா கண்டிப்பாக அதை முடிச்சிடுவாங்கனு சொல்வதை கேள்விபட்டிருப்போம். அதுதான் இது!”

“உங்களுடைய கரியரில் இது நான்காவது இந்தி ப்ராஜெக்ட். பாலிவுட் உங்களை எப்படி வரவேற்கிறது?”
“இது எனக்கு மட்டுமே நடப்பது கிடையாது. இதுக்கு முன்னாடி பலரும் பாலிவுட்டுக்கு வந்து நடிச்சிருக்காங்க. எல்லா இடங்களில் திறமை இருப்பவர்களை கொண்டாடுறாங்க. ஆனா, எனக்கு கிடைக்கிற மாதிரியான விஷயங்கள் ஓடிடி தளங்களின் வளர்ச்சிக்குப் பிறகு ரொம்பவே அதிகமாக இருக்கு. அது நல்ல விஷயம். வெப் சீரிஸ்கள்ல குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கும் அதிகமாக நேரம் கிடைக்கிறதால அவங்களுடைய திறமையை முழுமையாக வெளிப்படுத்த முடியுது. அதற்கப்புறம், அவங்களுக்கான வாய்ப்பும், களமும் பெரிதாகுது. எனக்கும் நிறைய வாய்ப்புகள் வருது.
நான் தேர்ந்தெடுத்துதான் நடிச்சிட்டு இருக்கேன். ஏன்னா, எனக்கு அவ்வளவு அதிகமாக இந்தியும் பேசத் தெரியாது. இப்போ இந்த சீரிஸுக்காக என்னை பேட்டி காண்கிற பத்திரிகையாளர்கள் ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை வச்சு என்னை அடையாளப்படுத்துறாங்க. என்னுடைய முதல் இந்தி ப்ராஜெக்ட்ல நடிக்கும்போது அங்கிருந்த ஒரு ப்ரொடக்ஷன் நபர் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை வச்சு என்னை அடையாளப்படுத்தி நல்லபடியாக கவனிச்சுகிட்டாரு. நம்ம நடிச்சப் படங்களை வச்சு வெளியூர்கள்ல நம்மை அடையாளப்படுத்துறது ஸ்பெஷல் தானே!”
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…