
சென்னை: இந்திய ரயில்வேயில் விரைவு ரயில்கள் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பாக, முன்பதிவு பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். இதனால், கடைசி நேரத்தில் டிக்கெட் உறுதியாகாத சூழலில், பயணத்தை மாற்றி அமைக்க பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர். இதற்கு தீர்வு காண ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதை தொடர்ந்து, ரயில்கள் புறப்படுவதற்கு 8 மணி நேரம் முன்பாக, முன்பதிவு பட்டியலை வெளியிட வேண்டும் என்று ரயில்வே வாரியம் பரிந்துரை செய்தது. அந்த வகையில், தெற்கு ரயில்வேயில் விரைவு ரயில்கள் புறப்படுவதற்கு 8 மணி நேரம் முன்பு, முன்பதிவு பட்டியல் வெளியிடும் நடைமுறை நேற்று அமலுக்கு வந்தது.