• July 5, 2025
  • NewsEditor
  • 0

வரதட்சணை கொடுமையால் திருப்பூரைச் சேர்ந்த ரிதன்யா என்ற 27 வயது பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி செய்தியாக பார்க்கப்படுகிறது. அவரின் கடைசி நிமிடங்களில், ”இந்த தற்கொலை முடிவிற்கு என்னுடைய திருமண வாழ்க்கை தான் காரணம், நீங்கள் யாரிடமும் தலை குனிய வேண்டாம்.. இந்த ஆடியோவை காட்டுங்கள்” என்று வாட்ஸ்அப்பில் தனது தாய், தந்தையருக்கு மெசேஜ் அனுப்பி விட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் ரிதன்யா.

திருமணத்தின் போது ரிதன்யாவின் குடும்பம், நகை பணம் வரதட்சணையாக கொடுத்துள்ளது. மேலும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தப்பட்டதாகவும் இதனால் மனமுடைந்து ரிதன்யா இந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

ரிதன்யா மட்டுமின்றி கடந்த சில நாள்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் லோகேஸ்வரி வரதட்சணை கொடுமையால் திருமணமான 4 நாட்களிலேயே உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இப்படி தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

புள்ளி விவரங்கள் சொல்வதென்ன?

NCRB தகவலின் படி, இந்தியா என்று எடுத்துக் கொண்டால், 2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரை வரதட்சணை கொடுமையால் 35,493 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். குறிப்பாக 2022 என்ற எடுத்துக்கொண்டால் 6,450 பேர் வரதட்சணையால் உயிரிழந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

வரதட்சணை வழக்கு என்று எடுத்துக் கொண்டால் 2022-ல் 1,323 வழக்குகளும், 2021 ஆம் ஆண்டு 13,534 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு என்று எடுத்துக்கொண்டால் கடந்த 2022 ஆம் ஆண்டு 29 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இது மற்ற மாநிலங்களை காட்டிலும் குறைவு என்றாலும் வரதட்சணை வழக்குகள் அதிகமாகி கொண்டே இருக்கின்றன. குடும்ப பிரச்னை காரணமாக மட்டும் 31.7 சதவீதம் பேர் தற்கொலை செய்ய நேரிடுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

ஒரு திருமணம் நடக்க வேண்டும் என்றால், கேட்டாலும் கேட்காவிட்டால் வரதட்சணை என்ற ஒரு விஷயம் அதில் வந்துவிடுகிறது.

ரொக்கம், சொத்து, வீடு, இடம், தங்க நகைகள், வீட்டுக்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள், கார், பைக் இது போதாது என்று வங்கியில் செட்டில்மெண்ட் என நவீன வரதட்சணை கொடுக்கப்படுகிறது.

இதுபோக திருமணத்திற்கான செலவுகளை பெண் வீட்டார் சார்பில் இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற வழக்கம் எங்களுக்கு உள்ளது என்று மறைமுகமாக கூறி ஒரு விதமான அழுத்தத்தை கொடுக்கின்றனர். தற்போது நவீன உலகில், திருமணம் என்றாலே ப்ரீ வெட்டிங், போஸ்ட் வெட்டிங் விலையுயர்ந்த பொருள்கள், ஆடைகள் என கிராண்ட் ஆக இருக்க வேண்டும் என்ற சமூக அழுத்தமும் இதற்குள் வந்துவிடுகிறது.

பணம், தங்கம் போன்ற பாரம்பரிய கோரிக்கைகளை விட்டுவிட்டு இன்று பெரும்பாலான குடும்பங்கள் நவீன வரதட்சணையாக விலை உயர்ந்த கார்கள், அப்பார்ட்மெண்ட், விலை உயர்ந்த மொபைல், வெளிநாட்டு சுற்றுலா பேக்கேஜ் போன்றவற்றை மறைமுகமாக எதிர்பார்க்கின்றன.

இது போன்ற நவீன வரதட்சணை வெளிப்படையாக இல்லாமல் ஸ்டேட்டஸ், எதிர்பார்ப்பு, நவீன வாழ்க்கை முறை என இன்று பல விதங்களில் மாறியுள்ளது.

நவீன வரதட்சணை, ஸ்டேட்டஸ் என்ற பெயரில் திருமணங்களில் நடைபெறும் அழுத்தங்கள் குறித்தும், தற்கொலைக்கு தூண்டும் உளவியல் தாக்கங்கள் குறித்தும் உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த் விளக்குகிறார்…

தற்கொலைக்கு முன்னால் ஏற்படும் உளவியல் அழுத்தங்கள்

உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த், ”இன்றைய காலகட்டத்தில் ”வரதட்சணை” என்ற பெயர் மறு உருவாக்கம் பெற்றுள்ளது. ஸ்டேட்டஸ் என்ற பெயரில் பல்வேறு விஷயங்களை திருமண வீடார்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுபோன்ற வழக்குகளில் எல்லா தற்கொலைகளும் வரதட்சணைக்காக தான் நிகழ்த்ததா என்று கேட்டால், இல்லை…வெளி உலகத்திற்கு வரதட்சணையை ஒரு பிரச்னையாக கூறுவார்கள். வரதட்சணை பிரச்னை இருக்கும், ஆனால் அது முக்கியமான அல்லது வாழ முடியாத அளவிற்கு ஒரு பிரச்னையாக இருக்காது. பணத்திற்காக வேறொரு இடத்தில் பிடிக்காத திருமணத்தை செய்து வைக்கும் போது, இதுபோன்ற பிரச்னைகள் நிகழ்கின்றன.

இரு வீட்டார்கள் திருமணத்திற்கு முன்பே பேசிக்கொள்வது நல்லது. செய்து தான் ஆக வேண்டும் என்று ஒரு குடும்பம் மற்றொரு குடும்பத்தின் மீது அழுத்தம் கொடுக்கும்போது அது வரதட்சணை பிரச்னையாக மாறுகிறது.

இன்று சமூகத்தில் பல அழுத்தங்கள் உள்ளன. சமூகத்திற்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்று பல பெண்கள் இந்த முடிவை எடுக்கின்றனர்.

குடும்ப மதிப்பிற்காக மௌனம்

பெண்களுக்கு கல்வி தான் முக்கியம் சொந்த காலில் நிற்க வேண்டும், அப்படி இருந்தால் மட்டுமே, யார் இருந்தாலும் இல்லை என்றாலும் உன்னை நீ பார்த்துக் கொள்ள முடியும் என்று சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு பணம், நகை, சொத்து, வீடு எல்லாம் வாங்கி கொடுத்து விடுகிறோம், வெறுமனே ஒரு டிகிரியை மட்டும் படி என்று வளர்க்கக்கூடாது.

பல பெண்கள் அழுத்தத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் அல்லது சுயமாக ஒரு வாழ்க்கையை நடத்த முடியாமல் இருப்பதாலும் இதுபோன்ற முடிவுகளை எடுக்கின்றனர். பொருளாதார ரீதியாக பின்தங்கி இருக்கும் குடும்பங்களில் பெண்கள் இதற்கு மேல் தாய் வீட்டை கஷ்டப்படுத்த விரும்பவில்லை என்று தற்கொலை முடிவிற்கு தள்ளப்படுகின்றனர்.

தைரியம் இல்லாத நிலையால் பல்வேறு சூழல்களை எதிர்கொள்ள பெண்கள் தடுமாறுகின்றனர். திருமணம் தான் ஒரு குடும்பத்தின் மானம் மரியாதை, குடும்ப மதிப்பிற்காக மௌனம் காக்க வேண்டும் என்றெல்லாம் குடும்பத்தில் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. இதனால் உதவியற்ற நிலையும், அவமானம் பற்றிய பயமும் அதிகமாகிறது. மனரீதியான துன்புறுத்தல்களை பெண்கள் எதிர்கொள்கின்றனர்.

எல்லாமே வரதட்சனை பிரச்னை இல்லை…

இரு வீட்டாரிடம் இருந்து வரதட்சணை கொடுக்க சம்மதித்த பின் பெண்கள் தங்களை ஒரு பெருந்தொகைக்கு விற்பதாக எண்ணுகின்றனர். அதிலிருந்து தான் சிக்கல்கள் ஆரம்பமாகின்றன. ரொக்கத்தை அல்லது ஏதேனும் வரதட்சணையை பெண்களுக்காக அளிக்கின்றனர் என்பது பாரம்பரியமாக இருந்து வருகிறது. தன்னுடைய குடும்பத்திலிருந்து கொடுக்கப்படும் பொருட்கள் பெண்ணிற்காக பயன்படுத்தப்படுகிறது என்றால், அதனை பெண்கள் வைத்துக் கொள்ளலாம், அது வரதட்சனை பிரச்னையல்ல…அதே சமயத்தில் அழுத்தத்தின் பேரில் கொடுக்கப்பட்டாலும், வாங்கபட்டாலும் அது தவறு. அப்போதே திருமணத்தை நிறுத்துவது நல்லது.

தங்களின் பெண் குழந்தைகளுக்கு கல்வியின் முக்கியத்துவத்தையும் எதிர்காலத்தில் சுய சம்பாத்தியம் முக்கியம் என்பதை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற தவறுகள் நிகழாமல் இருக்கும். வரதட்சணை கொடுமை ஒரு சமூக பிரச்னையாக இருப்பினும் வீட்டிலிருந்தே அதனை சரி செய்ய தொடங்க வேண்டும்” என்கிறார் உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *