• July 5, 2025
  • NewsEditor
  • 0

ஜப்பானில் இன்று (ஜூலை 5) ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என ஒரு மங்கா நாவல் கணித்ததாக பரவிய தகவல்கள் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மங்கா என்பது ஜப்பானிய கிராஃபிக் நாவல்கள் அல்லது காமிக்ஸ் ஆகும்.

ஓய்வுபெற்ற மங்கா கலைஞரும் “புதிய பாபா வாங்கா” என்றும் அழைக்கப்படும் ரியோ டாட்சுகி எழுதிய The Future I Saw எனும் மறுபதிப்பு, பசிபிக் பெருங்கடலில் உள்ள நாடுகளை “பெரிய” சுனாமி தாக்கும் என்று எச்சரிக்கிறது.

இந்த தகவல் சமூக ஊடகங்களில் பரவி, பலரும் அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக, ஹாங்காங், தைவான், சீனா, தென் கொரியா போன்ற நாடுகளில் இந்த வதந்தி அதிகம் பகிரப்பட்டுள்ளது. சுற்றுலா நிறுவனங்கள் கூட, பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறி வருகின்றன.

மங்கா புத்தகம் எதை கணித்தது?

The Future I Saw என்ற மங்கா புத்தகத்தில், ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் இடையிலுள்ள கடற்கீழ் பகுதியிலொரு பிளவு ஏற்பட்டு, 2011ல் ஏற்பட்ட பேரலையை விட மூன்று மடங்கு பெரிய பேரலை உருவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான எந்த விஞ்ஞான ஆதாரமும் இல்லை என்றாலும், சிலர் இதை உண்மையான முன்னறிவிப்பாகவே எடுத்துக்கொண்டு பீதியில் உள்ளனர்.

ரியோ தட்ஸுகி, 2011ல் ஜப்பானை உலுக்கிய தொஹோகூ நிலநடுக்கம் மற்றும் பேரலை போன்ற பல நிகழ்வுகளை முன்னதாக கணித்ததாக நம்பப்படுகிறார். மேலும், பிரின்சஸ் டயானா மரணம், COVID-19 பரவல் போன்றவற்றையும் அவர் கணித்ததாக அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.

விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்?

ஜப்பானில் நிலநடுக்கங்களை நேரம், இடம், அதிர்வு அளவு என தெளிவாக முன்கூட்டியே கணிப்பது சாத்தியமில்லை என விஞ்ஞானிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனமும், “இதுபோன்ற நேரடி நிலநடுக்க கணிப்பு தவறான தகவல்” எனவும், மக்கள் வதந்திகளால் தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம் என எச்சரித்துள்ளது.

சுற்றுலா மீது தாக்கம்

இந்த வதந்திகள் காரணமாக ஜப்பான் செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஏப்ரலில் 3.9 மில்லியன் வெளிநாட்டு பயணிகள் வந்திருந்த நிலையில், மே மாதத்தில் ஹாங்காஙில் இருந்து வரும் பயணிகள் எண்ணிக்கை 11% குறைந்துள்ளது. ஹாங்காங் ஏர்லைன்ஸ், கிரேட்டர் பே ஏர்லைன்ஸ் போன்றவை ஜப்பான் விமானங்களை ரத்து செய்துள்ளன.

நிபுணர்கள் எச்சரிக்கை

டோக்கியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நவோயா சேக்கியா இதுகுறித்து கூறுகையில், ஆதாரமற்ற கணிப்புகளில் கவனம் செலுத்துவதை விட, எந்த நேரத்திலும் பேரழிவுகளுக்குத் தயாராக இருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருக்கிறார்.

2055க்குள் ஜப்பான் நன்காய் பள்ளத்தாக்கில் இருந்து 9.0 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட 80% வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர். ஆனால் இதற்கும் தற்போதைய வதந்திகளுக்கும் எந்த சம்பந்தம் இல்லை எனவும், தவறான தகவல்களை நம்பி பயப்பட வேண்டாம் எனவும் நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *