
விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் ‘வீர தீர சூரன்’ திரைப்படம் வெளியாகியிருந்தது. இயக்குநர் எஸ்.யூ. அருண் குமார் இயக்கியிருந்த இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இப்படத்தின் ரிலீஸுக்கு முன்பே அவருடைய 63-வது திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியிருந்தது.
‘மாவீரன்’, ‘3 BHK’ ஆகியப் படங்களைத் தயாரித்த அருண் விஷ்வா இப்படத்தைத் தயாரிக்க, இயக்குநர் மடோன் அஸ்வின் இப்படத்தை இயக்குவதாக அறிவிப்பு வந்திருந்தது.
ஆனால், அந்த அறிவிப்புக்குப் பிறகு படத்தைப் பற்றிய வேறு எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.’3 BHK’ படத்தின் ரிலீசைத் தொடர்ந்து பல திரையரங்குகளுக்கும் விசிட் அடித்து மக்களின் வரவேற்பைப் பார்த்து வருகிறார் தயாரிப்பாளர் அருண் விஷ்வா.
அப்படி அங்கு வைத்து விக்ரமின் 63-வது திரைப்படம் பற்றிப் பேசியிருக்கிறார். அங்கு அவர், “‘சியான் 63’ படத்தின் முதற்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

அதற்காகத்தான் நேரம் எடுத்து வருகிறோம். நான் படத்தின் அப்டேட்களைக் கொடுக்கவில்லை என விக்ரம் சாரின் ரசிகர்கள் பலரும் என்னைத் திட்டி வருகிறார்கள்.
அத்திரைப்படம் எனக்கு மிகவும் பர்சனலாக நெருக்கமான திரைப்படம். படத்தைப் பற்றிய அறிவிப்பு சரியான நேரத்தில் வரும்,” எனக் கூறியிருக்கிறார்.