
மும்பை: "தாக்கரேக்கள் இருவரையும் ஒன்றிணைத்தது நான்தான் என ராஜ் தாக்கரே கூறி இருக்கிறார். அவர்களை ஒன்றிணைத்ததற்கான பெருமையை எனக்கு அளித்ததற்கு நன்றி" என்று மகாராஷ்டிர முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக – சிவ சேனா – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு, சமீபத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. இதற்கு, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா (உத்தவ் பாலாசாஹெப் தாக்கரே) கட்சியும், ராஜ் தாக்கரே தலைமையிலான நவ நிர்மான் சேனாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. “அரசு எங்கள் மீது இந்தியை திணிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என அவர்கள் கூறினர். இதற்கு பெரும் ஆதரவு திரண்டதை அடுத்து, மாநில அரசு தனது அறிவிப்பை திரும்பப் பெற்றது.