
கேரளாவில் நிபா வைரஸ் மீண்டும் பரவி வருகின்றது என்பதால் மக்கள் மத்தியில் புதிய அச்சம் உருவாகியுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு கோழிக்கோட்டில் கடுமையான மூளைக்காய்ச்சல் (AES) நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 18 வயது சிறுமிக்கும், தற்போது மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மன்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 38 வயது பெண்ணுக்கும் நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் (NIV) ஜூலை 4, 2025 அன்று 38 வயது பெண்ணுக்கு நிபா தொற்று இருப்பதை உறுதி செய்தது. மூளைக்காய்ச்சல் நோயால் உயிரிழந்த சிறுமியின் இறுதி பரிசோதனை முடிவு இன்னும் பெறப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு கேரளாவில் நிபா வைரஸ் அச்சுறுத்தல் தலைதூக்கியுள்ளது.
மருத்துவர்கள், ஊழியர்கள் தனிமைப்படுத்தல்
நிபா தொற்றால் உயிரிழந்த சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் உடற்கூறு பரிசோதனை செய்த மருத்துவ குழுவினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
மலப்புரம், பாலக்காடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் சுகாதார அதிகாரிகள் உயர் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர். நிபா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறுகையில், ”நிபா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் கடந்த சில நாள்களாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முப்பது குழுக்கள் மூன்று மாவட்டங்களில் செயல்பட்டு, தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகின்றன. போலீசாரின் உதவியுடன் தொடர்புகளை கண்டறியும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்ட அளவில் ஹெல்ப்லைன் மற்றும் கட்டுப்பாட்டு மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன” என தெரிவித்திருக்கிறார்.