• July 5, 2025
  • NewsEditor
  • 0

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு கால இடைவெளிகூட இல்லாததால், ஆளுங்கட்சியான தி.மு.க-வும், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வும் தேர்தல் வேலையை மும்முரமாகத் தொடங்கிவிட்டன.

இப்போதைக்கு தி.மு.க கூட்டணி அப்படியேதான் இருக்கிறது. மறுபக்கம், அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி மட்டும் உறுதியாகியிருக்கிறது.

ஒரு கட்டத்தில் அ.தி.மு.க-வுடன் தமிழக வெற்றி கழகம் கூட்டணிக்கு செல்லும் என்று பேச்சு அடிபட்ட வேளையில், அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி மீண்டும் உருவானதால் இனி விஜய், பா.ஜ.க அங்கம் வகிக்கும் அ.தி.மு.க கூட்டணியில் இணைவாரா என்ற கேள்வி எழுந்தது.

எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்தின் லோகோ

இதற்குப் பதிலளிக்கும் வகையில், “சுயநலத்துக்காக பா.ஜ.கவுடன் கூட்டணி செல்ல தி.மு.க-வோ அ.தி.மு.க-வோ இல்லை நாம்.” என த.வெ.க செயற்குழு கூட்டத்தில் நேற்று வெளிப்படையாகப் போட்டுடைத்த விஜய், “த.வெ.க தலைமையில் கூட்டணி அமையும்” என்றும் கூறினார்.

மேலும், இக்கூட்டத்தில் விஜயை முதல்வர் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அதேபோல், அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார், ஒருவேளை இக்கூட்டணி வெற்றிபெற்றால் அது அ.தி.மு.க ஆட்சியாக இருக்குமா அல்லது பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியாக இருக்குமா என்ற கேள்விகளும் அ.தி.மு.க-வை நோக்கி எழுந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறான அரசியல் பரபரப்புக்கு மத்தியில், தேர்தலை எதிர்நோக்கி ஜூலை 7-ம் தேதி முதற்கட்ட சுற்றுப்பயணத்தைத் தொடங்கவிருக்கும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்றுப்பயண பாடலையும், லோகோவையும் சென்னையில் இன்று வெளியிட்டார்.

அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “சென்னைக்கு அமித் ஷா வந்தபோது, `அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணிக்கு அ.தி.மு.க தலைமையேற்கும், அ.தி.மு.க ஆட்சியமைக்கும், முதலமைச்சர் வேட்பாளர் இபிஎஸ்’ என்று தெளிவாகத் தெரிவித்தார்.

இதில், அமித் ஷா கூறிய பிறகு வேறு யார் பேசினாலும் அது சரியல்ல.” என்று கூறினார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மேலும், விஜய்யின் நேற்றைய அறிவிப்பு குறித்த கேள்விக்கு, “அது அவருடைய முடிவு” எனப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “தி.மு.க ஆட்சியை அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் தேர்தலில் கூட்டணியமைத்து போட்டியிட வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். தி.மு.க அகற்றப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *