
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் (ஜூலை) கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது சம்பந்தப்பட்ட வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆம்ஸ்ட்ராங் மறைவுக்குப் பின்னர், அவர் வகித்த தலைவர் பதவியில் ஆனந்தனும், மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் நியமிக்கப்பட்டனர்.
பின்னர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும், தன்னுடைய குடும்பத்தை கவனித்து கொள்வதிலும் பொற்கொடி முழுமையாக கவனம் செலுத்துவார் என்று கூறி மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து கட்சி அவரை விடுவித்தது.
இவ்வாறிருக்க, பொத்தூரில் அமைந்துள்ள ஆம்ஸ்ட்ராங்கின் நினைவிடத்தில் அவரின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில், விசிக தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் இதே நிகழ்ச்சியில் ஜெய் பீம் ஜெய் ஆம்ஸ்ட்ராங் கோஷங்களுக்கு மத்தியில், “தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை பொற்கொடி தொடங்கியிருக்கிறார்.
தொடர்ந்து, கட்சிக் கொடியை பொற்கொடி அறிமுகப்படுத்தினார். நீல நிறத்தாலான அக்கொடியின் நடுவில் பேனா ஏத்திய ஒற்றை யானை உருவம் பதிக்கப்பட்டிருந்தது.