• July 5, 2025
  • NewsEditor
  • 0

பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் கோபால் கெம்கா. தொழிலதிபரான இவர் பாஜக-வில் இருக்கிறார். கோபால் மாநிலம் முழுவதும் மகத் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.

கோபால் நேற்று இரவு வெளியில் சென்று விட்டு தனது வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

வீட்டிற்கு அருகில் காரில் இருந்து அவர் இறங்கியபோது அங்கு நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் கோபால் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து ஓடிவிட்டனர்.

துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்த கோபால் சம்பவ இடத்தியேலேய் உயிரிழந்துவிட்டார். இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து கோபால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பாட்னா போலீஸ் கமிஷனர் திக்‌ஷா கூறுகையில், ”இரவு 11 மணிக்கு எங்களுக்கு காந்தி மைதானம் பகுதியில் தொழிலதிபர் கோபால் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். கொலையாளிகளை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

கொலை நடந்த இடத்திற்கு அருகில் உள்ள டுவின் டவரில்தான் கோபால் வசித்து வந்தார். கொலைக்கான காரணம் என்னவென்று இன்னும் தெரியவரவில்லை. கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹஜ்பூர் பகுதியில் கோபால் மகன் குஞ்சன் இதே போன்று வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மகனை தொடர்ந்து தந்தையும் அதே முறையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து கோபாலின் சகோதரர் சங்கர் கூறுகையில், ”கோபாலுக்கு அச்சுறுத்தல் இருந்தது குறித்து எங்களுக்கு தெரியாது. சம்பவம் இரவு 11.40 மணிக்கு நடந்தது. ஆனால் போலீஸார் அதிகாலை 2.30 மணிக்குதான் வந்தனர்” என்றார்.

பா.ஜ.க பிரமுகர் ராம் கிர்பால் இது குறித்து கூறுகையில், ”துப்பாக்கிச்சூடு நடந்தது குறித்து போலீஸாருக்கு இரவு 11 மணிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் போலீஸார் அதிகாலை 1.30 மணிக்குத்தான் வந்தனர். மாநில நிர்வாகம் நடந்துகொள்ளும் விதம் மிகவும் கவலையளிக்கிறது. விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கண்டுபிடித்து தகுந்த தண்டனை கொடுக்கவேண்டும்” என்றார்.

சுயேச்சை எம்.பி. பப்பு யாதவ் நேற்று இரவு துப்பாக்கிச்சூடு நடந்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ”பீகாரில் யாருக்கும் பாதுகாப்பாக இல்லை. பீகார் கிரிமினல்களின் சரணாலயமாக மாறிவிட்டது. கோபால் மகன் கொலை செய்யப்பட்டபோது கடும் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்நேரம் கோபால் கொலை செய்யப்பட்டு இருக்கமாட்டார்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *