• July 5, 2025
  • NewsEditor
  • 0

தமிழகத்தை உலுக்கிக்கொண்டிருக்கும் அஜித் குமார் மரணம் தொடர்பான பரபரப்பு தகவல்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. நீதிமன்றம் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது. இதற்கிடையில், அஜித்குமார் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த முனைவர் நிகிதா தொடர்பான செய்திகளும் வெளியாகி சமூக ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தது.

இந்த நிலையில், தலைமறைவாக இருக்கும் முனைவர் நிகிதா அழுதுகொண்டே பேசும் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த ஆடியோவில், “மிகுந்த மனவேதனையில்தான் இந்த ஆடியோ பதிவு செய்கிறேன். ஒரு பெண்ணாக இருந்து, இந்த சமூகத்தில் படித்து, பட்டம் பெற்று முன்னேறுவது மிகவும் சிரமமான விஷயம்.

ஆனால், இந்த சமூகத்தில் பெண்ணின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அவள் மீது ஏதாவது குற்றச்சாட்டு எழுந்தால், அதைவைத்து அவளை புதைக்கும்வரை விடமாட்டார்கள். அதுதான் எனக்கும் ஏற்பட்டுள்ளது.

அஜித்குமார் இறந்தது மிகவும் வேதனையான சம்பவம். தம்பி அஜித்குமார் மரண செய்தி கேட்டு நானும், அம்மாவும் அழுதுக்கொண்டிருக்கிறோம். முதல்வர் மன்னிப்புக் கேட்டார். நாங்களும் மன்னிப்புக் கேட்கிறோம். தம்பி அஜித்குமாரின் வீட்டுக்குச் சென்று அவரின் அம்மாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என நினைத்தோம். ஆனால், கேமராக்கள் எங்களை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

சம்பவத்தன்று புகார் தெரிவித்ததோடு நாங்கள் வீட்டிற்கு வந்து விட்டோம். அதன்பின் என்ன நடந்தது என தெரியாது. எனக்கு எல்லா உயிரும் மிக முக்கியம். ஈ, எறும்புக்கு கூட தீங்கு செய்யாதவள் நான். என் அம்மா உடல் நலமில்லாதவர். அவரைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. திண்டுக்கல்லில் கல்லூரியில் பணியாற்றி வரும் நான், கல்லூரி திறந்த முதல்நாள் மட்டும்தான் கல்லூரி சென்றேன். அதற்குப் பிறகு தொடர்ந்து விடுப்பில் உள்ளேன்.

அஜித்குமார்

எனது தாய் கீழே விழுந்து அடிபட்டு பேச முடியாத அளவிற்கு உடல்நிலை சரியில்லாததால் அவருக்கு உதவியாக உள்ளேன். என்னுடைய தந்தை 2001-ம் ஆண்டு முக்கிய அரசு பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார். அதற்குப் பிறகு 2011-ம் ஆண்டு பலதரப்பினரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றதாக புகார் வந்துள்ளது. ஓய்வு பெற்ற பின்பு ஒரு அதிகாரிக்கு என்ன மரியாதை கிடைக்கும் என்பது இந்த சமூகத்தில் தெரிந்த ஒன்று. அப்படி இருக்கும்போது இந்த மோசடி குற்றச்சாட்டை எப்படி ஏற்க முடியும்.

தற்போது எனக்கு சோதனையான காலம். என்னை பற்றி இப்போது பல்வேறு தரப்பினர் பேட்டியளித்து வருகிறார்கள். அவர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்று எனக்குத் தெரியும். என்னுடைய சொந்த வாழ்க்கையை பேசுவதற்கு முன்பு அவர்களுடைய நிலையை யோசித்து பார்க்க வேண்டும். என்னைப் பற்றி ஊடகங்கள் தொடர்ந்து பேசி வருகின்றன. அது இந்த நாட்டுக்கு தேவையில்லாத ஒன்று. என்னைப் பற்றி பேசும் அளவுக்கு நான் அவ்வளவுப் பெரிய ஆள் இல்லை.

நிகிதா

எனக்கு பெரிய அதிகாரிகளையும், தமிழக முதல்-அமைச்சர் நன்கு தெரியும் எனக் கூறி, அதை பயன்படுத்தி தான் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

எனக்கு எந்த பெரிய அதிகாரிகளும், முதல்-அமைச்சரும் தெரியாது. என்னை பற்றி வேண்டுமென்றே திமுக நிர்வாகி ஒருவர் தூண்டிவிட்டு வருகிறார். காலம் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். நான் பொறுமையாக இருந்து வருவதால் குற்றவாளி கிடையாது. இது முற்றிலும் வேதனையான நேரம். அஜித்குமார் இறந்ததற்கு அவருடைய தாயாரிடம் நான் பலமுறை மன்னிப்பு கேட்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *