
பாட்னா: பிஹார் தலைநகர் பாட்னாவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பிஹார் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ் குமார் கூறியதாவது: மாநிலம் முழுவதும் 5 லட்சம் பெண்களுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் வழங்கப்படும். இந்தத் திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. இந்த நாப்கின்களை கட்சி மகளிர் பிரிவினர் வழங்குவர். இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் சார்பில் வழங்கப்படவுள்ள இலவச நாப்கின்கள் அடங்கிய பாக்கெட்டில் ராகுல் காந்தி, பொதுச் செயலர் பிரியங்கா காந்தி படங்கள் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி தனது எக்ஸ் தளத்தில் கூறும்போது, “மகளிருக்கு வழங்கப்படும் இலவச சானிட்டரி நாப்கின் பாக்கெட்களில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இது பிஹார் மாநில பெண்களை அவமதித்தது போன்றதாகும். மகளிருக்கு எதிரான கட்சியாக காங்கிரஸ் உள்ளது. வரும் தேர்தலின்போது பிஹார் மாநில பெண்கள், காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணிக்கு பாடம் கற்பிப்பார்கள்’’ என்றார்.