• July 5, 2025
  • NewsEditor
  • 0

காஸா பகுதிகளுக்குள் உணவு, உதவிகளை கொண்டு செல்லும் லாரிகளை நுழைவதைத் தடைசெய்து பட்டினி கொலை, உதவி தேடி வரும் மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தும் துப்பாக்கிச் சூடு என சர்வதேச நீதிமன்ற கண்டனங்களுக்குப் பிறகும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொடர்ந்து போர் குற்றங்களை செய்துவருகிறார். அந்த வரிசையில் இப்போது இணைந்திருக்கிறது இஸ்ரேல் ஆதரவு பெற்ற அமெரிக்க உதவி விநியோக நிறுவனம் Gaza Humanitarian Foundation (GHF).

மனிதாபிமான உதவிகளை தேடி வந்த போரால் பாதிக்கப்பட்ட மக்கள் மீது உதவி விநியோக தளங்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பாதுகாப்பு துணை ஒப்பந்ததாரர்கள் பிபிசியிடம் தெரிவித்திருக்கின்றனர்.

GHF

இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காவலர்கள், “உதவி விநியோக தளத்துக்கு வந்தவர்களில் பலர் உதவிக்கு தகுதியற்றவர்கள். அதிக ஆயுதம் ஏந்தியவர்கள். பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான நடத்தையை வெளிப்படுத்தினர். ஆனால் எந்த பொதுமக்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை” எனத் தெரிவித்திருக்கின்றனர்.

இது தொடர்பாக பேசிய முன்னாள் பாதுகாப்பு ஒப்பந்ததாரர் குழுவை சார்ந்தவர், “உணவு மற்றும் உதவி தேடிச் சென்ற பாலஸ்தீன அகதிகள் மீது உதவி விநியோக தளங்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். வந்தவர்கள் யாரும் ஆயுதம் ஏந்தவோ அல்லது அச்சுறுத்தலை ஏற்படுத்தவோ இல்லை. அவர்களில் பெரும்பாலானவர்கள் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள். அவர்கள் மீது ஸ்டன் கையெறி குண்டுகள் வீசப்பட்டது. துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், துணை ஒப்பந்ததாரர்கள் AP செய்தி நிறுவனத்திடம், “நேரில் கண்ட சாட்சிகளிடம் நேர்காணல்களை நடத்தி, ஆவணங்களை மதிப்பாய்வு செய்தோம். சரிபார்க்கப்பட்ட வீடியோ காட்சிகளில் ‘மனிதாபிமான உதவியைப் பெற முயற்சிக்கும் பாலஸ்தீன பொதுமக்கள் மீது நேரடி வெடிமருந்துகள், ஸ்டன் கையெறி குண்டுகள்’ பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.” என்றனர்.

AP செய்திக்கு பதிலளிக்கும் விதமாக, GHF எக்ஸ் பக்கத்தில், ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில்,“எங்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உடனடி விசாரணையை தொடங்கியுள்ளோம். வீடியோவில் கேட்ட துப்பாக்கிச் சூடு GHF விநியோக தளத்திற்கு அருகில் இருந்த IDF (இஸ்ரேலிய இராணுவம், இஸ்ரேல் பாதுகாப்புப் படை) இலிருந்து வந்தது என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இது தனிநபர்களை நோக்கி இயக்கப்படவில்லை, மேலும் யாரும் சுடப்படவில்லை. எங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு சில வாரங்களுக்கு முன்பு தவறான நடத்தைக்காக பணிநீக்கம் செய்யப்பட்ட அதிருப்தியடைந்த முன்னாள் ஒப்பந்ததாரர்தான் முதன்மை ஆதாரம். அதனால் அவர்களின் அறிக்கை நம்பகத்தன்மையை இழக்கிறது.” எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.

மாறுவேட படுகொலை

ஆக்ஸ்பாம் உள்பட 150-க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் “GHF செயல்படத் தொடங்கியதிலிருந்து 500-க்கும் மேற்பட்ட அகதிகள் கொல்லப்பட்டுள்ளனர்” என அறிக்கைகள் வெளியிட்டதை அடுத்து, GHF மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்திருக்கிறது.

1999-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மருத்துவ உதவி நிறுவனமான டாக்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ், “GHF-ன் உதவி மையங்களை மனிதாபிமான உதவியாக மாறுவேடமிட்டு படுகொலை செய்து வருகிறது” எனத் தெரிவித்திருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *