• July 5, 2025
  • NewsEditor
  • 0

கேரள மாநிலம் கோட்டையம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 68  ஆண்டுகள் பழமையான 3 மாடி கட்டடத்தின் டாய்லெட் பகுதி நேற்று உடைந்து விழுந்தது.

டாய்லெட்டில் குளிக்கச் சென்ற தலையோலப்பறம்பு பகுதியைச் சேர்ந்த பிந்து(52) என்பவர் இறந்தார். மேலும், மூன்று பேர் காயமடைந்தனர்.

பிந்துவின் மகள் நவமி (20) மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகாக அட்மிட் செய்யப்பட்டிருந்தார். மகளை உடனிருந்து கவனித்துவந்த பிந்து கட்டடம் இடிந்துவிழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வின்செண்ட்(11), ஜினுஷஜி(38), அமல் பிரதீப்(20) ஆகியோர் காயம் அடைந்த நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

கட்டடம் இடிந்து விழுந்ததும் மூன்றுபேர் மட்டுமே காயம் அடைந்ததாக ஆரம்பத்தில் அதிகாரிகள் கூறினர். இதனால், மீட்புப்பணிகள் நடத்தவில்லை. இதற்கிடையே அம்மாவை காணவில்லை என நவமி கூறியதைத் தொடர்ந்தே, விபத்து நடந்து 2 மணி நேரத்துக்குப்பின் மீட்புப்பணிகள் தொடங்கப்பட்டன.

மரணமடைந்த பிந்து

பிந்துவின் உடல் மீட்கப்பட்டது. சுகாதாரத்துறையின் அலட்சியத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடங்குவதாக டாக்டர் ஹாரிஷ் புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் கோட்டையம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டணம் இடிந்து விழுந்து பெண் மரணம் அடைந்த சம்பவம் கேரளா அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கேரள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “தன்னை உடன் இருந்து பார்க்க வந்த தாயின் உடலை கட்டிப்பிடித்து ஒரு மகள் அழும் காட்சி என் நெஞ்சை பதற வைத்தது. மீட்பு பணிகள் செய்ய வேண்டிய நேரத்தில், அதைச் செய்யாமல் அவர் சுகாதாரத் துறையின் பெருமைகளை குறித்து பேசிக் கொண்டிருக்கிறார் அமைச்சர்.

காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன்

காங்கிரஸ் எம்.எல்.ஏ சாண்டி உம்மன் அங்கு வந்து பிரச்சனை செய்த பிறகுதான் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன. மருத்துவமனை கட்டடம் இடிந்து விழுந்து பெண் இறந்ததற்கு இந்த அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். அந்த குடும்பத்திற்கு எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. குறைந்தபட்சம் 25 லட்சம் ரூபாய் அந்த குடும்பத்திற்கு வழங்க வேண்டும். அந்த பெண் குழந்தையின் முழு சிகிச்சை செலவுகளையும் அரசு ஏற்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

சுகாதாரத்துறை அமைச்சர் அந்த பதவியில் இனியும் தொடர தகுதி இல்லை. கேரளாவின் ஆரோக்கியத்துறையை அவர் வெண்டிலேட்டரில் அட்மிட் செய்துவிட்டார். மருந்து இல்லை, ஆபரேஷன் செய்த பிறகு தையல் போடுவதற்கு நூல் இல்லை என பல பிரச்னைகள் உள்ளன.

ஆபரேஷனுக்கு நூல், ஊசி, பஞ்சு ஆகியவற்றை நோயாளிகளே வாங்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது கேரளாவில் இறப்பு சதவிகிதம் அதிகரித்துள்ளது. அனைத்து தொற்று நோய்களும் கேரளத்தில் உள்ளன.

கேரளாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பிரச்னைகள் உள்ளன. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எக்ஸ்பிரி டேட் முடிந்த மருந்துகளை வழங்கியதுதான் இந்த அரசு.

எனவே சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் ராஜினாமா செய்ய வேண்டும். நிலம்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முடிந்த பிறகு, முதலமைச்சர் பினராயி விஜயன் எதைப் பற்றியும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்” என்றார்.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்

இதுபற்றி கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், ” கோட்டையம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட விபத்தில் பிந்து மரணமடைந்த சம்பவம் எனக்கு மிகவும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அந்த குடும்பத்தின் துக்கம், எனது துக்கமாகும். அந்த குடும்பத்தின் துக்கத்தில் நான் பங்கெடுக்கிறேன். அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கிறேன். பிரியப்பட்ட பிந்துவின் குடும்பத்துக்கு அரசு ஆதரவாக இருக்கும்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *