
சென்னை: “கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன், என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகவோ கூட்டணி இல்லை, என்பதில் தவெக மிக உறுதியாக இருக்கிறது. கூட்டணி என்றாலும் தவெக தலைமையில் அமையும் கூட்டணி எப்போதும் திமுக மற்றும் பாஜகவுக்கு எதிரானதாகத் தான் இருக்கும்.” என்று அக்கட்சியின் தலைவர் விஜய் கூறியுள்ளார்.
சென்னையை அடுத்த பனையூரில் தவெக செயற்குழுக் கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் இன்று (ஜூலை 4) நடைபெற்றது. இக்கூட்டத்தில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக விஜய்தான் இருப்பார் என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டணி குறித்த முடிவெடுக்கும் அதிகாரத்தை விஜய்க்கு வழங்குவது என்றும் முடிவு எட்டப்பட்டது. மேலும், தவெகவின் மாநில மாநாட்டை ஆகஸ்ட் மாதத்தில் நடத்துவது, பேரவைத் தேர்தலையொட்டி விஜய் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று முடிவு செய்யப்பட்டது.