
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் மணிமாறன். இவர் மயிலாடுதுறையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் காரைக்காலுக்கு சென்றுள்ளார். மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார் கோயில் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு எதிரே சென்று கொண்டிருந்த போது இரு கார்களில் வந்த மர்ம நபர்கள் மணிமாறன் சென்ற காரை மறித்துள்ளனர்.
பின்னர், மணிமாறன் இருந்த கார்களின் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்தனர். அதிர்ச்சியடைந்த மணிமாறன் காரில் இருந்து இறங்கி சாலையில் ஓடியுள்ளார். அவரை ஓட ஓட துரத்தி சென்ற மர்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் மணிமாறனின் தலை, முகத்தில் சரமாரியாக வெட்டினர். இதில் தலை மற்றும் முகம் சிதைந்த மணிமாறன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து செம்பனார் கோயில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “பா.ம.க-வின் காரைக்கால் மாவட்ட செயலாளராக இருந்தவர் தேவமணி. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதல் குற்றவாளி மணிமாறன் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பழிக்கு பழியாக இக்கொலை நடந்திருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. கொலையாளிகளை பிடிப்பதற்கு மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் ஐந்து தனிப்படைகள் அமைத்திருக்கிறார்” என்றனர்.

“தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உள்கட்சி தேர்தலுக்கான பணியில் கலந்து கொண்ட மணிமாறன் காரைக்கால் திரும்பியுள்ளார். அப்போது, செம்பனார் கோயில் பகுதியில் சென்ற போது காரை வழி மறித்த கூலிப்படை, மணிமாறனை சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்திருக்கிறார். அவரின் மறைவுக்கு காரணமான, கூலிப்படையை விரைந்து கைது செய்து, அக்கும்பலுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல்துறையும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது” என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.