• July 4, 2025
  • NewsEditor
  • 0

‘பரந்தூருக்கு ஆதரவாக தீர்மானம்!’

தவெக கட்சியின் செயற்குழுக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார் விஜய். நிகழ்வில் பரந்தூர் சம்பந்தமாக விஜய் வாசித்த தீர்மானம் கவனம் பெற்றிருந்தது. ‘1500 குடும்பம்தான்னு சொல்றீங்க. அவங்களும் நம்ம மக்கள்தானே.’ என பரந்தூர் மக்களுக்கு ஆதரவாகப் பேசிய விஜய்,

Vijay

‘விமான நிலையத் திட்டத்தை கைவிடவில்லையெனில் பரந்தூர் விவசாயிகளைத் திரட்டி தலைமைச் செயலகத்துக்கு வந்து உங்களை சந்திக்க நேரிடும்.’ என்றார். விஜய்யின் பேச்சால் பரந்தூர் விமான நிலையம் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. விஜய் நிறைவேற்றியிருக்கும் தீர்மானத்துக்கு போராட்டக் குழுவின் ரியாக்சன் என்னவென்பதை அறிய வேண்டி சிலரிடம் பேசினோம்.

‘பரந்தூர் விவசாயிகளின் ரியாக்சன்!’

பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவின் தலைவர் சுப்பிரமணியன் பேசுகையில், ‘பல அரசியல் கட்சித் தலைவர்கள் பரந்தூர் வந்துட்டு போயிருந்தாலும் விஜய் வந்ததுக்கு அப்புறம்தான் எங்க மேல பெரிய கவனமே உண்டாச்சு. அவரும் ஆரம்பத்துல இருந்தே கட்சியோட மாநாடு, பொதுக்குழு, செயற்குழுன்னு எல்லாத்துலயும் இந்த திட்டத்தை கைவிடணும்னு தீர்மானம் நிறைவேற்றி அழுத்தம் கொடுத்திருந்தாரு. கட்சி ஆரம்பிச்சு முதல் போரட்டத்தையும் எங்க ஊர்ல இருந்துதான் தொடங்கினாரு.

பரந்தூரில் விஜய்
தவெக விஜய் – பரந்தூர்

இதெல்லாம் எங்க போராட்டத்துக்கு வலு சேர்த்துச்சு. சமீபத்துலதான் எங்க போராட்டக் குழுவைச் சேர்ந்தவங்க அவரை நேர்ல சந்திச்சுட்டு வந்தோம். அந்த சந்திப்பையே அவ்வளவு நெகிழ்ச்சியா மாத்திட்டாரு. 10-15 நிமிஷம்தான் சந்திப்பு நடக்கும்னு நினைச்சுக்கிட்டு போனோம். ஆனா, 45 நிமிஷம் சந்திப்பு நடந்துச்சு. அவர் கையாலயே காபியும் பண்டங்களும் பரிமாறி அப்படி கவனிச்சுக்கிட்டாரு. நாங்க ஏன் போராடுறோம், இந்தத் திட்டத்தால என்னென்ன பாதிப்புகள் வரும், அரசாங்கம் எங்களுக்கு எப்படியெல்லாம் அழுத்தம் கொடுக்குறாங்கன்னு எல்லாத்தையும் அவர்க்கிட்ட சொன்னோம்.

எங்க கண்ணீரை மொத்தமா கொட்டித் தீர்த்திட்டோம். அன்னைக்கே அவர் எல்லாத்தையும் குறிப்பெடுத்துக்கிட்டாரு. நாங்க அன்னைக்கு சொன்ன விஷயங்களோட சாராம்சம் இன்னைக்கு அவரோட பேச்சுல வெளிப்பட்டுச்சு. அவர் ரெண்டு தீர்மானம்தான் வாசிச்சாரு. அதுல ஒன்னு பரந்தூர் பத்தினது. அதுலயும் 1500 குடும்பம்னா லேசா போச்சா…அவங்களும் நம்ம மக்கள்தானேன்னு கேட்டாரு பாருங்க. என்ன அருமையான கேள்வி அது. 75 வருச பாரம்பரியத்தோட 25-30 வருசம் ஆட்சியில இருந்த கட்சிக்கு இல்லாத புரிதல் இவருக்கு இருக்கு. எத்தனை மக்கள்னு முக்கியம் இல்ல. என்ன பாதிப்புங்றதுதான் முக்கியம். அவர் கேட்ட அந்த ஒத்த கேள்விலேயே அவர் எந்த அளவுக்கு விவசாயப் பெருங்குடிகளை மதிக்கிறாருன்னு புரிஞ்சது.

விஜய்
விஜய்

சீமான், வேல்முருகன், விஜய் இவங்க மூணு பேரும்தான் எங்களுக்காக தொடர்ச்சியா பேசுறாங்க. விஜய் எப்போதுமே நாங்க தொடர்புகொள்ற இடத்துலயே இருக்குறாரு. முதலமைச்சரை, துணை முதலமைச்சரையெல்லாம் சந்திக்கணும்னு நினைச்சோம், முடியல. மற்ற கட்சிகளும் கூட்டணி கணக்குகளை மனசுல வச்சு மௌனமா நிக்குறாங்க. அப்படியொரு சூழல்ல விஜய் மூலமா எங்க மேல பெரிய வெளிச்சம் விழுது. அவருக்கு மனமார்ந்த நன்றிகள்.’ என்றார்.

‘விஜய் மட்டும் தேதி குறிக்கட்டும்..’

‘பரந்தூர் போராட்டத்தையே விஜய்க்கு முன்னாடி பின்னாடின்னு பிரிக்கலாம். விஜய் பரந்தூருக்கு வந்த பிறகு இந்தியா முழுவதும் இந்த பிரச்சனை தெரிய வந்துருச்சு. விஜய் இதை பத்தி பேசுறப்போ எங்களுக்கு பெரிய சப்போர்ட் கிடைச்சா மாதிரி இருக்கு.’ எனப் பேசத் தொடங்கினார் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவின் செயலாளர் கதிரேசன்.

கதிரேசன்
கதிரேசன்

மேற்கொண்டு பேசியவர், ‘விஜய் ஒரு பெரிய சக்தி. அவர் பின்னாடி இளைஞர் பட்டாளமே நிக்குது. அதனால எங்களுக்கும் இந்த போராட்டத்தை இன்னும் துணிச்சலாவும் தைரியமாவும் எடுத்துட்டு போற சக்தி கிடைக்குது. நாங்க அவரை சந்திச்ச போதே, ‘பயப்படாதீங்க, நான் இருக்குற வரைக்கும் இந்தத் திட்டத்தை அவங்களால கொண்டு வர முடியாது.’ அப்டின்னு தைரியம் சொன்னாரு. இதோ இப்போ திரும்பயும் பேசிருக்காரு. போராட்டக்குழுவை தாண்டி எங்க சனம் எல்லாரையும் அவரோட பேச்சு எழுச்சி பெற செஞ்சிருக்கு. விஜய் தேதி குறிச்சிட்டாருன்னா, அவர் பின்னாடி 13 கிராம மக்களும் சேர்ந்து நின்னு தலைமைச் செயலகத்துக்கு போவோம்.

விஜய்
விஜய்

அரிட்டாப்பட்டி மாதிரி பெரிய மக்கள் எழுச்சியை நீங்க பார்ப்பீங்க. இந்தப் போராட்டத்தை விஜய் கையில கொடுத்துட்டோம். அவர் கூப்பிட்டா பின்னாடி வந்துடுவோம். முதலமைச்சரை பார்த்தா வருத்தமாத்தான் இருக்கு. இப்படியொரு திட்டத்தைக் கொண்டு வந்து அவர் சிக்கலில் மாட்டிக்கிட்டாரு.’ என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *