• July 4, 2025
  • NewsEditor
  • 0

கந்துவட்டிக் கொடுமையால் தூக்குப் போட்டு தற்கொலை

புதுச்சேரி கொசப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 34 வயதான விக்ரம், இறைச்சிக் கடையில் பணிபுரிந்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு மினி லாரி ஒன்றை வாங்கிய விக்ரம், அதற்காக பலரிடம் கந்துவட்டிக்கு கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விபத்துக்குள்ளான விக்ரமால், சரியாக வேலைக்கு செல்ல முடியவில்லை. அதனால் மினி லாரிக்காக கடன் வாங்கியவர்களுக்கு அவரால் சரியாக வட்டி செலுத்த முடியவில்லை. அதனால் அவருக்கு கடன் கொடுத்தவர்கள் வட்டியையும், அசலையும் திருப்பிக் கேட்டிருக்கின்றனர்.

தற்கொலை கடிதம்

அவரால் கடனை கொடுக்க முடியவில்லை என்பதால், கடன்காரர்கள் மிரட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் மனமுடைந்த விக்ரம், நேற்று முன் தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது தற்கொலைக்கு முன்பு அவர் தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு எழுதிய கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில், `தனசேகர் என்பவரிடம் நான் 10 பைசா வட்டிக்கு பல்வேறு தவணைகளில் ரூ.3,80,000 பணம் வாங்கினேன். அதற்கு ஒவ்வொரு மாதமும் ரூ.38,000 சரியாக வட்டி செலுத்தி வந்தேன். மூன்று மாதங்களுக்கு முன்பு நான் விபத்தில் விழுந்ததில் இருந்து என்னால் வட்டி செலுத்த முடியவில்லை.

`வட்டி கொடுக்கும் வரை உன் மனைவியையும், பெண்ணையும் என்னிடம் விடு…’

அதனால் தனசேகர் என் மனைவியைப் பற்றி தவறாகப் பேசி வந்தான். `நீ வட்டி கொடுக்கும் வரை உன் மனைவியையும், உன் பெண்ணையும் என்னிடம் விடு’ என்று பேசி மிரட்டினான். அதனால் நான் கடும் மன உளைச்சலுக்கு உள்ளானேன். நான் உயிரோடு இருந்தால் இவனை ஒன்றும் செய்ய முடியாது. அதனால் நான் தற்கொலை செய்தால் பிறகு அரசு இவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதற்கான அனைத்து ஆடியோக்களும் என் வாட்ஸ்-அப்பில் இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார். அதேபோல, `த.வெ.க தலைவர் விஜய் அண்ணாவுக்கு, 10%, 15% என்று கந்துவட்டிக்கு விட்டு சித்ரவதை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனிமேல் வரவிருக்கும் உங்கள் ஆட்சியிலாவது இப்படி கந்துவட்டிக்கு விடுபவர்கள் பயப்பட வேண்டும். என் மனைவி  மற்றும் குழந்தைகளின் படிப்புக்கும், வாழ்க்கைக்கும் நீங்கள் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியிருக்கிறார். அதையடுத்து, `அரசுக்கு ஒரு வேண்டுகோள். நான் இறந்தபிறகு என் உடல் உறுப்பை எடுத்து அதன்மூலம் என் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *