• July 4, 2025
  • NewsEditor
  • 0

வெளிர்நிற முழுகுர்தா மற்றும் பைஜாமா, தலையில் டிசைன்களுடன்கூடிய தொப்பி சகிதம் ஆண்கள்; இதேபோல உடல் முழுமையும் கவர் செய்யும் வகையில பலவண்ணங்களில் தலையையும் சேர்த்து கவர் செய்யக்கூடிய டாப் மற்றும் பாட்டம் டிரெஸ்ஸுடன் (ஃபுர்கா) பெண்கள்; கிட்டத்தட்ட இதே ஸ்டைலில் குழந்தைகள்… கடந்த பத்து நாள்களாக சென்னையில் திரும்பிய பக்கமெல்லாம் இவர்களின் கூட்டம்தான். குறிப்பாக, அனைத்து மெட்ரோ ரயில்களிலும் தடுக்கிவிழுந்தால், இவர்கள்தான்!

யார் இவர்கள்? திடீரென்று எங்கிருந்து வந்தார்கள்? என்னதான் நடக்கிறது சென்னையில்? என்று விசாரித்தால், ஆச்சர்யத்துடன் அதிர்ச்சி, பேரதிர்ச்சி கலந்த தகவல்களும் கலந்து வந்துவிழுந்தன.

உலக அளவில் திரண்ட போஹ்ராக்கள்!

இவர்கள் அனைவருமே குஜராத் மாநிலத்தை தாயகமாகக் கொண்ட தாவூதி போஹ்ரா முஸ்லீம் பிரிவினர். இவர்கள் ஆண்டுதோறும் மொஹரம் மாதத்தில் ‘ஆஷாரா முபாரகா’ எனப்படும் ‘மொஹரம் சபை’ நிகழ்ச்சியை நடத்துவார்கள். முகமது நபியின் பேரன் இமாம் ஹுசைன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் செய்த தியாகங்களை நினைவுகூர்வதுதான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம். மொஹரம் மாதத்தில் தங்களுடைய மத குருவைச் சந்தித்து ஆசி பெறுவது வழக்கம். இந்த குரு, ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் ஏதாவது ஓர் நகரத்தில் முகாமிட்டு, அங்குள்ள மசூதி உள்ளிட்ட இடங்களில் அந்த மக்களுக்கு தரிசனம் தருவார். இந்த ஆண்டு இதற்காக அவர் தேர்ந்தெடுத்த இடம்… நம்ம சென்னை!

வழக்கமாக சென்னை பாரீஸ் கார்னரில் உள்ள மூர் தெருவிலிருக்கும் இவர்களுடைய பிரத்யேக மசூதியில் ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சி நடக்கும். இந்த ஆண்டு தலைவரே வருவதாக தெரிவித்ததால், சென்னையில் வசிக்கும் தாவூதி போஹ்ரா முஸ்லீம்கள் சுமார் 8,000 பேர் மற்றும் உலகெங்கும் இருந்து வந்துள்ள பல்லாயிரக்கணக்கானவர்கள் என சுமார் 60 ஆயிரம் பேர் சென்னையை முற்றுகையிட்டுள்ளனர்.

பிரத்யேக பவுன்சர்கள்…

வேடிக்கை பார்க்கும் போலீஸார்!

பாரீஸ்கார்னர் பகுதியில் உள்ள ஆர்மேனியன் தெரு, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானம், கீழ்ப்பாக்கம் விங்ஸ் கன்வென்ஷன் சென்டர், ராயபுரம் செட்டி தோட்டம், புர்ஹானி மசூதி உள்ளிட்ட ஒன்பது இடங்களில் இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜூன் 27-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்வு, ஜூலை 5-ம் தேதி வரை தொடர்கிறது. சென்னை மூர் தெருவுக்குள் இவர்களுடைய மசூதி இருக்கும் பகுதிவரை, இந்த (மொஹரம்) மாதம் முழுக்கவே மற்றவர்களுக்கு அனுமதி இல்லை. பிரத்யேக காக்கி யூனிஃபார்ம் அணிந்த பவுன்சர்கள், கடும்பாதுகாப்பு மற்றும் தடுப்புகளை ஏற்படுத்திக் கண்காணிக்கிறார்கள். மீறினால், போலீஸுக்கு மேலாக கவனிக்கிறார்கள். போலீஸாரோ… வேடிக்கை பார்த்தபடி ஜூஸ், பிரியாணி என செமையாக என்ஜாய் செய்துகொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்காக அவர்கள் செய்திருக்கும் ஏற்பாடுகளும், அதையொட்டி அள்ளிவிட்டிருக்கும் பணமும் கண்களை கட்டுகின்றன. குறிப்பாக, விதிகளை மீறி சாலைகளை மொத்தமாக ஆக்கிரமிப்பதற்காக பணத்தை தண்ணீராக அள்ளிவிட்டுள்ளனர்.

மொத்தமாக ஆக்கிரமிக்கப்பட்ட தெருக்கள்!

சென்னையின் பாரிஸ் கார்னர் மொத்தமுமே பலவிதமான வியாபாரங்களும் நடக்கும் இடம். இங்குள்ள தெருக்களில் ஒருவர் நடந்து சென்று, அடுத்த தெருவை அடைந்துவிட்டால், அதுவே பெரிய சாதனைதான். கோப்பை வழங்கித் தட்டிக் கொடுக்கலாம். காரணம், அத்தனை குறுகலான தெருக்களாக இருப்பதும், வியாபாரம் படுபிஸியாக நடப்பதும்தான். இந்தக் குறுகலான தெருக்களில் சரக்கு வாகனங்கள், தள்ளுவண்டிகள், கார்கள், டூவீலர்கள் என்று முண்டியடிக்கும். கிட்டத்தட்ட பாரீஸ் கார்னர் பகுதி மொத்தமுமே இப்படித்தான் இருக்கும் எல்லா நாள்களிலும். இந்நிலையில், உள்ள மூர் தெரு, அங்கப்ப‌ன் தெரு ஆகியவற்றை தங்களின் நிகழ்ச்சிக்காக போரா முஸ்லிம்கள் மொத்தமாக ஆக்கிரமித்துக்கொள்ள, ரெண்டு படுகிறது ஏரியா.

பத்து நாள் நிகழ்ச்சிக்காக, ஒரு மாதத்துக்கு முன்னரே தெருவோரக் கடைகளையெல்லாம் காலி செய்து, தெருக்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர். தகரங்களைக் கொண்டு தெருவையே அடைத்து மூடிவிட்டனர். ஆங்காங்கே தகரங்களால் அறைகளை உருவாக்கி, அவற்றுக்கெல்லாம் ஏசி செய்து என ஏக கலாட்டாதான். இதனால், வழக்கமான போக்குவரத்து நெரிசல் நான்கைந்து மடங்கு கூடிப்போய், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் பயங்கர கோபத்திலும் அதிர்ச்சியிலும் இருக்கிறார்கள்.

ஆளுக்கு 10 லட்ச ரூபாய் கொடுத்து

ஆஃப் பண்ணிட்டாங்க!

அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் இதுகுறித்து பேசும்போது, ”ஒட்டுமொத்தமா ஆக்கிரமிச்சிட்டாங்க. இதையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய போலீஸே, அவங்களுக்கு பாதுகாப்பு கொடுத்திட்டிருக்கு. போலீஸ்காரங்களுக்கு ஏசி போட்ட அறைகளை ரோட்டுலயே ஏற்படுத்திக் கொடுத்திருக்காங்க.

இந்த பகுதியை ஆக்கிரமிக்கப் போறாங்கனு கேள்விப்பட்டதுமே கடுமையா எதிர்ப்புக் கிளம்புச்சு. உடனே, போலீஸ்காரங்க தலையிட ஆரம்பிச்சாங்க. சரி, பிரச்னைக்கு தீர்வு கிடைச்சுடும்னு பார்த்தா… போலீஸே பாதுகாப்பு கொடுக்க ஆரம்பிச்சுடுச்சு. விசாரிச்சா… ‘ஐகோர்ட்டுல வழக்குப் போடப்போறோம்’னு சொன்ன மூணு முக்கியமான வியாபாரிங்களுக்கு தலா 10 லட்சம் கொடுத்திருக்காங்க. அப்புறம் சின்னச்சின்ன வியாபாரிகள்ல முக்கியமானவங்களுக்கு ஒரு லட்சம் வீதம் கொடுத்திருக்காங்க. மத்த வியாபாரிகள், வியாபாரம் பாதிக்கப்பட்டவங்க, கூலித் தொழிலாளிகள்னு பலருக்கும் பணம், சாப்பாடு, பரிசுப் பொருள்கள்னு கொடுத்து சமாதானப்படுத்தியிருக்காங்க” என்றவர்,

பா.ஜ.க-வுக்கு நண்பன்…

திராவிட மாடலுக்குத் தோழன்!

”இவங்க குஜராத்காரங்க. அந்த மாநிலத்தை ஆளும் பா.ஜ.க-வோட ரொம்ப இணக்கமா இருக்கக்கூடிய முஸ்லீம்கள். அதனால, தமிழ்நாட்டு கெவர்மென்ட்கிட்டயும் பேசிட்டாங்க. ஆனாலும் இங்க பணம் கொடுக்காட்டி எதுவும் நடக்காது. வடசென்னையைச் சேர்ந்த ஆளும் தி.மு.க-வினருக்கு சில பல லட்சங்கள அள்ளிவிட்டிருக்காங்க. இதுல இந்தப் பகுதியை தன்னோட ஆளுகையில வெச்சிருக்கிற அந்த முக்கியமான புள்ளிக்கு மட்டும் 50 லட்சம் கொடுத்திருக்காங்க. போலீஸ் அதிகாரிகளுக்கு 25 லட்சம் வரை அள்ளி இறைச்சிருக்காங்க. அதனால, ஆக்கிரமிப்பைத் தட்டிக் கேட்க வேண்டிய அரசாங்கமும் போலீஸும் பாதுகாப்பு கொடுத்திட்டிருக்கு. இந்தப் பகுதிக்கான போலீஸ் உயரதிகாரி தினம்தோறும் இங்க விசிட் செய்து, ‘எல்லாம் சரியா இருக்கா?’னு தவறாம பார்த்துத்துட்டு போறார்” என்று சொல்லி அதிரவைத்தவர்,

”சென்னையில இருக்கிற பெரும்பாலான நல்ல லாட்ஜ்களையெல்லாம் இவங்க புக் பண்ணிட்டாங்க. ஒரு லட்ச ரூபாய் கொடுக்கிறேன்னு சொன்னாகூட ஸ்டார் ஹோட்டல்கள்ல ரூம் இல்ல. அந்த அளவுக்கு பணம் விளையாடுது அவங்ககிட்ட” என்று சொல்லி மலைக்க வைத்தார்!

‘வேற மாதிரி ஆயிடும்’

அருகில் நீண்டிருந்த மற்றொரு வியாபாரி, ”நேற்றுகூட (ஜூன் 3 தேதி) இந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தன்னுடைய பைக்கை சாலையோரம் நிறுத்தினார். உடனே, அந்த பவுன்சர்கள் ஓடி வந்து நிறுத்தக் கூடாது என்று தடுத்தனர். அவரோ, ‘ஒரு நாள் இரண்டு நாள் என்றால் பரவாயில்லை வாரக்கணக்கில் ஏரியாவை ஆக்கிரமித்துக் கொண்டு, எங்களையே பைக் நிறுத்தக் கூடாது என்று சொன்னால் என்ன அர்த்தம்?’ என்று எதிர்த்துக் கேட்டார். உடனே ஓடோடி வந்த போலீஸ்காரர்கள், அந்த பவுன்சர்களை அனுப்பிவிட்டு, ‘இங்கே நிறுத்தக் கூடாது என்றால் நிறுத்தக் கூடாதுதான். மீறி நிறுத்தினால் வேற மாதிரி ஆயிடும்’ என்று அந்த இளைஞரை மிரட்டவே, வேறுவழியில்லாமல் அவர் பைக்குடன் வேறு இடத்துக்குச் சென்றுவிட்டார். இது ஒரு சாம்பிள்தான். இதுபோல தினமும் நாங்கள் அனுபவிக்கும் வேதனைகள் கொஞ்சமல்ல” என்று சொன்னார்.

உயர் நீதிமன்றத்துக்குப் பக்கத்துலயே

விதிமீறல்!

முக்கிய வணிக வளாகங்களுக்கு பணம் கொடுத்து மூட வைத்துவிட்டனர். ஒட்டுமொத்தத்தில் ஒரு கடைகூட இந்தப் பகுதியில் இயங்கவில்லை. குவியல் குவியலாக இளநீர், பெட்டி பெட்டியாக ஐஸ் வாட்டர் பாட்டில்கள், குளிர்சாதன கொட்டகைகள் என தெருவே செல்வச் செழிப்பு மிக்க போஹ்ரா முஸ்லிம்களால் நிறைந்து வழிகிறது. இதற்கு மட்டுமே கிட்டத்தட்ட 50 கோடி செலவழிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதைப் பற்றி பேசிய அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், ”பொது இடங்களை ஆக்கிரமித்து கூட்டம்போடவோ, வழிபாடு நடத்தவோ கூடாது என்ற உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என அனைத்துமே மிகக்கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன. இத்தனை இருந்தும், சென்னையின் உயர் நீதிமன்றத்துக்கு அருகிலேயே இரண்டு தெருக்களை மொத்தமாக அடைத்து வைத்து பத்து நாள்களாக நிகழ்ச்சியை நடத்திக் கொண்டுள்ளனர்.

இந்தத் தெருக்கள் வியாபார முக்கியத்துவம் வாய்ந்தவை. அத்துடன், பல்வேறு வழக்கறிஞர்கள், சீனியர் வழக்கறிஞர்கள் என பலரும் இங்கேதான் அலுவலகங்களை வைத்துள்ளனர். ஆனால், ஒருவர்கூட இதற்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை. அவர்களும்கூட தினம்தினம் கூட்ட நெரிசலில் சிக்கித்தான் நீதிமன்றத்துக்கே செல்கிறார்கள். நீதிமன்றத்தையொட்டியுள்ள அனைத்துப் பகுதிகளையும் இந்த நிகழ்ச்சிக்கு வருபவர்களுடைய வாகனங்கள்தான் ஆக்கிரமித்துள்ளன. ஒரு போராட்டம் நடத்துவதற்கு ஒரு மணி நேரம் அனுமதி கேட்டால் மறுக்கும் போலீஸ், இவர்களை மட்டும் ஒரு மாதமாக பொத்திப் பாதுகாக்கிறது” என்று புலம்பித்தீர்த்தார்.

பாய்… நீங்.. போகலீங்… ளா பாய்!

இப்படி ஏரியாவே அதகளப்பட்டுக் கொண்டிருப்பது பற்றி தன்னுடைய முகநூலில் எழுதியிருக்கும் மரியம் செல்வன் என்பவர், ”சாதாரண கலர் கைலியும், கலர் சட்டையுமாக மண்ணடியில் உலா வரும் நம்மில் சிலரை, மாற்று மத நண்பர்கள், ‘பாய்.. நீங்க போகலியா? டிரெஸ் மாத்தலையா?’ என்றெல்லாம் அப்பாவித்தனமாக கேட்பார்கள். ஆனால், போஹ்ரா முஸ்லீம்களின் மசூதியில் தவறுதலாக நுழையும் நம்ம ஊர் முஸ்லிம்களை அவர்கள் விரட்டியடிப்பார்கள். அதற்குப் பரிகாரம் செய்வதுபோல், நீர் தெளித்து சடங்கும் செய்வார்கள்.

போஹ்ரா முஸ்லீகள் வியாபாரத்தோடு மற்றவர்களை நிறுத்திக் கொள்வார்களே தவிர, யாரையும் மருந்துக்குக்கூட நட்பு வட்டத்தில் வைத்திருக்க விரும்ப மாட்டார்கள். இங்கே நான் சொல்ல வந்த ஒரு முக்கிய விஷயத்துக்கு வருகிறேன். இவர்களது நடமாட்டம் இருக்கும் மூர் தெருவில் உள்ள கடைகளின் உரிமையாளர்களிடம் பேசி, ஒரு மாத வாடகை, ஒரு மாத ஊழியர் சம்பளம், உரிமையாளருக்கு நட்ட ஈட்டுத்தொகை ஆகியவற்றைக் கொடுத்து, தங்களது இந்த விழாவுக்குக் கடையடைப்பு செய்து ஒத்துழைக்க வேண்டி, நடைமுறைப் படுத்தியும் வருகிறார்கள்.

‘கடைகள் திறந்திருந்தால்தானே மவனே ரோட்டை கிராஸ் செய்வாய்?’ என்பதுபோல் நிலைமை உள்ளதால், வேறு யாரையும எளிதாக ஃபில்ட்டர் பண்ண வசதி இது. கதை கதையாக இன்னும் நிறைய உண்டு” என்று குறிப்பிட்டுள்ளார்.

50 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில்..!

இஸ்லாமிய சமூகத்தில் தாவூதி போஹ்ரா முஸ்லிம்கள் பிரிவினர், இந்தியா மற்றும் உலகின் பல பகுதிகளில் வாழ்கிறார்கள். இவர்கள், இஸ்லாத்தின் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள். வணிகத் திறமையும், கல்வியறிவும், கட்டுப்பாடும் நிறைந்த வாழ்க்கை முறையும் இவர்களின் அடையாளமாக திகழ்கின்றன. இந்தியாவில் ஸ்டீல் உற்பத்தித் தொழிலில்தான் இவர்கள் பெருமளவில் ஈடுபட்டுள்ளனர்.

1975ல் இவர்களுடைய 52வது மதத் தலைவரான சையத்னா முகமது புர்ஹானுதீன், சென்னை நிகழ்ச்சியில் பங்கேற்றார். இப்போது, அவருடைய மகனும் 53வது தலைவரான சையத்னா முபாதல் சைபுதீன் பங்கேற்றுள்ளார். மூர் தெருவில் உள்ள மசூதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சைபுதீன், ”என் தந்தை 50 ஆண்டுகளுக்கு முன் இங்கே நடந்த மொஹரம் சபை நிகழ்வில் பங்கேற்றார். அதற்குப் பிறகு நான் வந்திருக்கிறேன். அவர், சென்னை மாநகரத்துடனும், இங்குள்ள போஹ்ரா முஸ்லிம்களுடன் நல்ல தொடர்பில் இருந்தார். சென்னையில் வசிக்கும் போஹ்ரா முஸ்லிம்கள் அர்ப்பணிப்பு, சேவை மனப்பான்மையுடன் வாழ்ந்து வருகின்றனர். அனைத்து சமூகங்களின் நம்பிக்கையை பெற்று உள்ளனர்” என்றெல்லாம் பாராட்டிப் பேசினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *