
ஈரோடு குமலன்குட்டை செல்வம் நகரைச் சேர்ந்தவர் சிவா. தனியார் கட்டுமான நிறுவன மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி சத்யா. இவர்களுடைய மகன் ஆதித்யா (17), மகள் தர்ஷினி (13). ஆதித்யா குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வந்தார்.
நேற்று காலை பள்ளிக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு ஆதித்யா சென்றார். ஆனால், அவர் பள்ளிக்குச் செல்லவில்லை. மாலையில் பள்ளிக்கு அருகே உள்ள பகுதியில் ஆதித்யா மயங்கி நிலையில் கிடந்தார்.
அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு ஆதித்தாயவைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
ஆதித்யாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸாரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் காதல் விவகாரத்தில் சக மாணவர்களால் ஆதித்யா அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “ஆதித்யா படிக்கும் பள்ளியில் வேறு வகுப்பில் படிக்கும் மாணவிகளிடம் ஆதித்யா பேசி வந்தார். இது அந்த வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்குப் பிடிக்கவில்லை.
இதுதொடர்பாக ஆதித்யாவுக்கும், அந்த மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஆதித்யாவுக்கும், அந்த மாணவர்களுக்கும் இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்த மாணவர்கள் ஆதித்யாவைக் கடுமையாகத் தாக்கி உள்ளனர்.
இதில், தலையில் பலத்த காயமடைந்த ஆதித்யா அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனால், பயந்துபோன அந்த மாணவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்” என்றார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், இரண்டு மாணவர்களைக் கைது செய்துள்ளனர். இந்தக் கொலையில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்று கைதானவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.