• July 4, 2025
  • NewsEditor
  • 0

மேகாலயாவில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராஜா ரகுவன்சி என்பவரை அவரது மனைவி தேனிலவுக்கு அழைத்துச் சென்று கூலிப்படையை ஏவி படுகொலை செய்த சம்பவத்தை போன்று பீகாரில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

மேகாலயா சம்பவத்தை பார்த்துதான் இப்படுகொலையை செய்ததாக பீகார் பெண் தெரிவித்துள்ளார். பீகாரில் உள்ள ஒளரங்காபாத் மாவட்டத்தில் இருக்கும் நபிநகர் ரயில் நிலையத்தில் இருந்து வந்து கொண்டிருந்த பிரியன்சு (32) என்பவர் கடந்த மாதம் 24-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இப்படுகொலை தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆரம்பத்தில் இது ஒரு ஒப்பந்த கொலை என்று போலீஸார் கருதினர். ஆனால் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. இக்கொலையில் பிரியன்சுவின் மனைவி குஞ்சா சிங் (30) ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. குஞ்சா சிங்கிற்கும், அவரது கணவர் பிரியன்சுவிற்கும் இடையே 45 நாட்களுக்கு முன்புதான் திருமணமே நடந்தது.

இது குறித்து ஔரங்காபாத் போலீஸ் எஸ்.பி அம்பரிஷ் கூறுகையில், ”விசாரணையில் குஞ்சா சிங்கிற்கு கடந்த 15 ஆண்டுகளாக தனது அத்தையின் கணவர் ஜீவன் என்பவருடன் ரகசிய தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் குஞ்சா சிங் திருமணத்திற்கு சம்மதிக்க மறுத்து வந்தார். குஞ்சா சிங்கிற்கு அவரது மாமாவுடன் இருக்கும் ரகசிய உறவு குறித்து தெரியவந்தவுடன் குடும்பத்தினர் குஞ்சா சிங்கிற்கு திருமணம் செய்து வைக்க முயன்றனர்.

குடும்ப நெருக்கடியால் பிரியன்சுவை குஞ்சா சிங் திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் தொடர்ந்து ஜீவனுடன் தொடர்பில் இருந்தார். ஆனால் அவரால் உறவை தொடர்ந்து ரகசியமாக வைத்திருக்க முடியவில்லை. இதனால் தங்களது உறவை தொடர கணவனை கொலை செய்ய குஞ்சா சிங் முடிவு செய்தார்.

மேகாலயாவில் நடந்தது போன்று கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக ஜீவனுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார். கொலையாளிகளை ஜீவன் ஏற்பாடு செய்தார்.

கணவருடன் குஞ்சா சிங்

கொலை நடந்த அன்று பிரியன்சு வாரணாசியில் இருந்து வந்தார். அவர் தனது மனைவிக்கு போன் செய்து தான் எங்கு இருக்கிறேன் என்ற விபரத்தை தெரிவித்தார். அத்தகவல்களை குஞ்சா சிங் கொலையாளிகளுக்கு தெரிவித்தார். கொலையாளிகள் பிரியன்சு தனது கிராமத்திற்கு வந்தபோது அவரை சுட்டுக்கொலை செய்தனர்.

குஞ்சா சிங்கின் மொபைல் போன் விவரங்கள், கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குஞ்சா சிங்கிடம் விசாரித்தபோது உண்மையை ஒப்புக்கொண்டார். அவருடன் சேர்த்து இக்கொலையில் ஈடுபட்ட ஜெய்சங்கர், முகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு கூலிப்படையை ஏற்பாடு செய்த ஜீவன் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *