• July 4, 2025
  • NewsEditor
  • 0

தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் அதீத மழைப்பொழிவு மற்றும் மேகவெடிப்பால் பேரழிவு ஏற்பட்டிருக்கிறது.

இதுவரை 69 பேர் பலியாகியுள்ள நிலையில் 700 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய சொத்துகள் சேதமடைந்திருக்கின்றன. 37 பேர் காணாமல் போனதாகவும் 110 பேர் பலத்த காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

சேதம் அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதானால், உயிரிழப்புகள் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக மண்டி மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் பெரும் சேதமடைந்துள்ளன.

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஜூலை 7 ஆம் தேதி வரை இமாச்சலப் பிரதேசத்திற்கு தொடர் கன மழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

மழையால் மாநிலம் முழுவதும் உள்ள 250க்கும் மேற்பட்ட சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. 500 ட்ரான்ஸ்ஃபார்ம்கள் பழுதடைந்துள்ளன, 700 குடிநீர் திட்டங்கள் செயல்படுத்த முடியாத நிலையில் உள்ளன.

மழையினால் ஏற்பட்ட சேதங்கள் பற்றி கடந்த புதனன்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் வருவாய்த் துறையின் சிறப்புச் செயலாளர் டிசி ராணா, “உண்மையில் பாதிப்பு இதைவிட பலமடங்கு இருக்கலாம். தேடல், மீட்பு மற்றும் மறுசீரமைப்பில் கவனம் செலுத்தி வருகிறோம்.” எனக் கூறியிருந்தார்.

கடந்த சில நாட்களில் 14க்கும் மேற்பட்ட மேகவெடிப்புகள் பதிவாகியிருப்பதாகவும், காலநிலை மாற்றம் புவி வெப்பமயமாதலின் விளைவுகளே இந்த பேரழிவு என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5000 நிவாரண நிதி வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

பாதிக்கப்பட்ட இடங்களில் இந்திய விமானப்படையினர் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்கள் விநியோகித்து வருகின்றனர். நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கிராமப்புறங்கள் மீட்பு பணிகள் சவாலாக இருப்பதனால் நிலைமை மோசமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது. தலைநகர் சிம்லாவும் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் இயக்க முடியாத சூழலில் உள்ளன.

இன்று முதலமைச்சர் சுகவிடம் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இமாச்சலப் பிரதேசத்திற்கு மட்டுமல்ல, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பருவமழையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் எனக் கூறியிருந்தார்.

வரும் நாட்களிலும் அதிக மழை பொழியும் எனக் கூறப்பட்டுள்ளதால் உள்ளூர் அதிகாரிகள், காவல்துறை, துணைப் பேரிடர் மீட்புப் படை, ஊர்க்காவல் படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) ஆகிய துறையினர் மூலம் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *