• July 4, 2025
  • NewsEditor
  • 0

கடலூரைச் சேர்ந்த சோனியா சென்னை ஆவடி ஆயுதப் படை பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்தார். அப்போது இவருக்கும், அங்கு கார் ஓட்டுநராகப் பணியாற்றிய கடலூரைச் சேர்ந்த முகிலன் என்பவருக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. அதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் கடலூருக்கு வந்த சோனியா, கணவர் முகிலனை தொடர்பு கொண்டு மகளைப் பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

தற்கொலை செய்து கொண்ட சோனியா

அதனடிப்படையில் முகிலன் மகளை அழைத்துக் கொண்டு கடலூர் வர, மூன்றுபேரும் தேவனாம்பட்டினம் கடற்கரையை சுற்றிப் பார்த்தனர். அதன்பிறகு முகிலன் குழந்தையை அழைத்துக் கொண்டு சென்னை சென்றுவிட, சோனியா கடலூரிலேயே தங்கிவிட்டார்.

கடந்த ஜூலை 1-ம் தேதி கணவர் முகிலனுக்குப் போன் செய்த சோனியா, `நான் விஷம் குடித்துவிட்டேன். மகளை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்திருக்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த முகிலன் கடலூரில் உள்ள தன்னுடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததுடன், உடனே கடலூருக்கு கிளம்பியிருக்கிறார்.

இதற்கிடையில் விஷம் குடித்துவிட்டு மயங்கிக் கிடந்த சோனியாவை மீட்ட உறவினர்கள், அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதன்பிறகு மேல்சிகிச்சைக்காக அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சோனியா, சிகிச்சைப் பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார்.

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு தன் கைப்பட எழுதிய கடிதத்தை போட்டோ எடுத்து, கணவர் முகிலனுக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பி வைத்திருக்கிறார். அந்தக் கடிதத்தில், `நான் ஆவடியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, ராஜூ என்ற காவலர் என்னுடன் நட்பாகப் பழகினார்.

அதன்பிறகு என்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறிய அவர், என்னுடன் நெருங்கிப் பழகினார். அதனால் நான் கர்ப்பமானேன். இதை ராஜூவிடம் கூறியபோது, கர்ப்பத்தைக் கலைத்துவிடு என்று மிரட்டினார்.

கைது செய்யபப்பட்ட காவலர் ராஜூ

காவல்துறை உயரதிகாரிகளிடம் இதுகுறித்து முறையிட்டபோது, ஒருதலைப்பட்சமாக என்னை மட்டுமே விசாரித்தனர். ராஜூவுக்குத்தான் அவர்கள் சாதகமாக இருந்தனர்.

அதேபோல எனக்கு கூடுதல் பணிகளையும் வழங்கினார்கள். அந்தப் பணிச்சுமை காரணமாக என் கர்ப்பமும் கலைந்துவிட்டது. அதனால் ஏற்பட்ட கடும் மன உளைச்சல் காரணமாகவே இந்த தற்கொலை முடிவை எடுக்கிறேன். என் தற்கொலைக்கு காவலர் ராஜூ மட்டுமே காரணம்.

அதனால் என் குழந்தை, கணவர் மற்றும் என் குடும்பத்தினரை விசாரிக்க வேண்டாம்’ என்று குறிப்பிட்டிருந்தார். அதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்த நெல்லிக்குப்பம் போலீஸார், விழுப்புரத்தைச் சேர்ந்த காவலர் ராஜூவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *