
சமூக ஊடகங்களில் தற்போது ‘Flying Naked’ என்ற புதிய ட்ரெண்ட் பரவி வருகிறது. விமானங்களில் பயணிக்கும்போது சிலர் தங்களின் உடைமைகளைக் குறைத்துக்கொண்டு பயணிக்கும் வீடியோக்களை #Flying Naked என்ற ஹாஷ்டேக்கில் பதிவிட்டு வருகின்றனர்.
‘Flying Naked’ என்ற இந்தச் சொல் முதலில் சில குறும்படக் காட்சிகளில் தோன்றியது. அதன் பிறகு டிக் டாக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் ஷோர்ட்ஸ் போன்ற சமூக ஊடகங்களில் வைரலாக பரவத் தொடங்கியது.
எதற்காக இந்த Flying Naked போக்கு?
பயணிகள் விமான பயணத்தின் போது அதிக கட்டணம், அவசியமற்ற விதிமுறைகள் போன்றவற்றைத் தவிர்க்கும் வகையில் ஃப்ளையிங் நேக்கட் எனப்படும் தனித்துவமான பயணப் போக்கைப் பின்பற்றி வருகின்றனர்.
அதாவது, விமான பயணத்தின்போது இருக்கும், நீண்ட வரிசைகள், அதிக லட்கேஜ் கட்டணம் மற்றும் பொருட்களை பேக் செய்வதில் ஏற்படும் சிரமம் ஆகியவற்றைத் தவிர்க்க லட்கேஜ் இல்லாத ஒரு பயணத்தை மேற்கொள்கின்றனர்.
‘Flying Naked’ என அதன் பெயர் வித்தியாசமானதாகத் தோன்றினாலும், அதன் நோக்கம் ஆடைகள் களைவதை உள்ளடக்குவதில்லை. மாறாக வழக்கமாகப் பயணத்தின்போது எடுத்துச்செல்லும் பொருட்களைக் குறைப்பதாகும்.
சிலர் விமான நிறுவனங்கள் பைகளின் எண்ணிக்கைக்கு, எடைக்கு விலைவாசியை அதிகரிக்கின்றன. அதிக கட்டணம் வசூலிக்கும் விதிமுறைகளை எதிர்த்து, எளிய உடைமைகளுடனும் விமான பயணம் செய்ய முடியும் என்பதை நிரூபிப்பதற்காக இப்படிச் செய்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது.
அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சில ஆசிய நாடுகளிலுள்ள விமான நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன.