
‘செயற்குழுக் கூட்டம்!”
தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் பனையூரில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடந்து முடிந்திருக்கிறது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தீர்மானம் வாசிக்கையில் திமுகவையும் முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.
‘ஆதவ் பேச்சு!’
ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, “ஓரணியில் திரள்வோம் என உறுப்பினர் சேர்க்கைக்காக வீடு வீடாக முதல்வர் சென்றுகொண்டிருக்கிறார். சிவகங்கையில் இளைஞர் துடிதுடிக்க கொல்லப்பட்டிருக்கும் சமயத்தில் ‘அப்பா’ என பொய்ப்பிரச்சாரம் செய்யும் முதல்வர் அந்த வீட்டிற்கு சென்று ஆறுதல் சொல்லவில்லை. எங்களின் தலைவர் ஒரு அண்ணனாக, மகனாக அவர்களின் துக்கத்திற்கு ஆறுதல் சொல்லி வந்தார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது.
மக்கள் விரோத திமுக ஆட்சியில் காவல் நிலையத்தில் 24 பேர் மரணமடைந்திருக்கின்றனர். அதிகார திமிர் கொண்ட ஆட்சியாளர்களே இதற்கு காரணம். காவல் மரணங்களை தடுக்கத் தவறிய உள்துறை அமைச்சருக்கு கண்டனங்கள். இந்த முதல்வரும் அவர் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியினரும் ஒன்றிய அரசின் அமைப்புகளை கடுமையாக விமர்சிக்கின்றனர்.

ஆனால், சிவகங்கை வழக்கை சிபிஐக்கு மாற்றுகிறார். இது வெட்கமாக இல்லையா? உங்களின் மாநில சுயாட்சி எங்கே போனது? முதலமைச்சர் ஒட்டுமொத்த தமிழகத்திடமும் பொது மன்னிப்புக் கேட்டு உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும்.’ என்றார்.