
தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடந்து வருகிறது. இந்த நிகழ்வில் நிர்வாகிகள் மத்தியில் விஜய் சில முக்கியமான விஷயங்களை பேசியிருக்கிறார்.
விஜய் பேசியதாவது, ‘கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் மறைமுகமாகவோ நேரடியாகவோ கூட்டணி இல்லை. ஒன்றிய அளவில் மலிவான அரசியல் ஆதாயங்களுக்காக மக்களை மதரீதியாக பிளவுப்படுத்தி குளிர்காய நினைக்கிறது பா.ஜ.க.
அவர்களின் விஷமத்தனமான வேலைகள் எங்கு வேண்டுமானாலும் எடுபடலாம். தமிழகத்தில் எடுபடாது. சகோதரத்துவமும் சமத்துவமும் ஊறிய மண் இது. தந்தை பெரியாரையோ, அண்ணாவையோ அவமதித்து அரசியல் செய்ய நினைத்தால் அவர்களால் ஒரு போதும் வெல்ல முடியாது. சுயநலத்துக்காக பா.ஜ.கவுடன் கூட்டணி செல்ல திமுகவோ அதிமுகவோ இல்லை நாம்.

கூட்டணி என்றாலும் தவெக தலைமையில் அமையும் கூட்டணி திமுகவுக்கும் பாஜகவுக்கும் எதிராகத்தான் அமையும் என்பதை உறுதிபட சொல்லிக் கொள்கிறேன்.’ என்றார்.
செயற்குழுக் கூட்டத்தில் விஜய் இரண்டு தீர்மானங்களை வாசித்து நிறைவேற்றியிருந்தார். ஒன்று திமுகவுக்கு எதிராகவும் இன்னொன்று பா.ஜ.கவுக்கு எதிராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.