இனி ரயில் பயணங்களில் டிக்கெட் முதல் உணவு ஆர்டர் வரை அனைத்துமே ‘ரயில் ஒன்’ செயலி மூலம் ஈசியாக செய்துகொள்ளலாம். இந்த செயலி சமீபத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முன்பெல்லாம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ‘ரெயில் கனெக்ட்‘ செயலி, புறநகர் ரயில் டிக்கெட் பெற ‘யு.டி.எஸ்’ செயலி, ரயில்களில் உணவு ஆர்டர் செய்ய ‘ஐ.ஆர்.சி.டி.சி இ- கேட்டரிங்’ என ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி செயலிகளை பயன்படுத்த வேண்டியதாக இருந்தது. ஆனால், இப்போது அனைத்திற்குமான ஒன் ஸ்டாப் சொல்யூசனாக ‘ரயில் ஒன்’ செயலி என்ட்ரி கொடுத்துள்ளது.
ரயில் ஒன் செயலியில் என்னென்ன சேவைகளை பெற முடியும், அதை எப்படி பதிவு செய்வது என்பதை பார்க்கலாம்… வாங்க…
இந்த செயலியில் முன்பதிவு ரெயில் டிக்கெட், முன்பதிவில்லா டிக்கெட், நடைமேடை டிக்கெட், ரயில்கள் மற்றும் பி.என்.ஆர். ஸ்டேட்டஸ், டிராவல் பிளான், பணத்தை சேமித்து வைத்து கொள்ள R- wallet, ரயில்வே ஹெல்ப்லைன், ரயிலில் உணவு ஆர்டர் போன்ற ரயில் சேவை சம்பந்தமான எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா அனைத்தையும் செய்யலாம்.
இதை ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் இரண்டிலும் டௌன்லோடு செய்ய முடியும்.
இந்த செயலியில் Log in செய்வது எப்படி?
நீங்கள் ஏற்கனவே ‘ரெயில் கனெக்ட்‘ அல்லது ‘யு.டி.எஸ்.’ செயலிகளில் ரெஜிஸ்டர் செய்துள்ள அதே யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டிலேயே இந்த செயலியிலும் லாகின் செய்துகொள்ளலாம்.
அல்லது, புதிதாகவும் பதிவு செய்யலாம். புதிதாக பதிவு செய்ய, பெயர், மொபைல் எண், மெயில் ஐ.டி ஆகியவற்றை உள்ளீடு செய்யவும்.
இந்த செயலியில் லாகின் செய்த உடன், 6 எண் கொண்ட பின்னை செட் செய்துகொள்ளவும். இன்னும் எளிமையாக லாகின் செய்ய, பயோமெட்ரிக் லாகின் வசதியும் கொடுக்கப்பட்டு உள்ளது.

டிக்கெட் புக் செய்வது எப்படி?
முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லா டிக்கெட், பிளாட்பார்ம் டிக்கெட் என தனித்தனி ஆப்ஷன்கள் உள்ளன.
டிக்கெட் முன்பதிவு செய்ய, Reserved Ticket-ஐ கிளிக் செய்து, ‘எந்த ரயில் நிலையத்தில் இருந்து, எந்த ரயில் நிலையத்திற்கு செல்கிறீர்கள்?’, பயணிக்கும் தேதி போன்ற விவரங்கள் கொடுத்து தேடினால் ரயில்களின் பட்டியல் வரும்.
அதில், நீங்கள் செல்ல வேண்டிய ரயிலை தேர்ந்தெடுத்து, உங்கள் டிக்கெட் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.
இந்தத் கட்டணத் தொகையை எளிமையாக கட்ட, ‘R-Wallet’-ஐ பயன்படுத்தலாம். இது Gpay, PhonePe போன்ற ரயில் கட்டண செயலி ஆகும்.
முன்பதிவில்லா டிக்கெட் பெற, Unreserved-ஐ பயன்படுத்தி, உங்கள் பயண விவரங்கள் உள்ளீடு செய்தால், முன்பதிவில்லா டிக்கெட்டை பெறலாம்.
உங்களுக்கு எந்த ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பார்ம் டிக்கெட் தேவைப்படுகிறது என்ற விவரங்களை உள்ளீடு செய்து எளிமையாக இந்த செயலியின் மூலம் பிளாட்பார்ம் டிக்கெட் பெறலாம்.

‘Track your Train’ ஆப்ஷன்
முன்பெல்லாம் ரெயில் எங்கு உள்ளது, எந்த ஸ்டேஷனை தாண்டி உள்ளது என்பதை அறிய ‘Where is my Train’ என்ற தனியார் செயலியை பயன்படுத்த வேண்டியதாக இருந்தது.
ஆனால், தற்போது இந்த வசதி ‘ரயில் ஒன்’ செயலிலேயே உள்ளது.
இந்த செயலியில் இருக்கும் ‘Track your Train’-ஐ கிளிக் செய்து, நீங்கள் தேட விரும்பும் ரயிலின் எண் அல்லது அதன் பெயரை உள்ளீடு செய்தாலே போதும், அந்த ரயில் எங்கு உள்ளது?, எப்போது நீங்கள் எதிர்பார்க்கும் ரயில் நிலையத்திற்கு வரும்? தாமதமாக வருகிறதா? உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம்.
இதில் உள்ள கோச் பொசிஷன் என்பதை கிளிக் செய்தால், நீங்கள் பயணிக்கும் ரயிலில் நீங்கள் ஏற வேண்டிய பெட்டி எந்த இடத்தில் உள்ளது என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.
உணவு ஆர்டர் செய்யும் வசதி
‘ரெயில் ஒன்’ செயலியில் இருக்கும் ‘ஃபுட் ஆர்டர்’-ஐ கிளிக் செய்து, உங்கள் பி.என்.ஆர் விவரங்களை பதிவு செய்து, உணவு ஆர்டர் செய்துகொள்ளலாம்.
இந்த ஆப்ஷனில், நீங்கள் வாங்க விரும்பும் உணவு வகைகளை ஆர்டர் செய்து விவரங்களை சமர்ப்பித்தால், அடுத்த ரயில்வே ஸ்டேஷனில் உங்களுக்கு தேவையான உணவு டெலிவரி செய்யபடும்.
மேலும், ரயில்வே தொடர்பான புகார், ‘டிராவல் ஃபீட்பேக்’ வசதி கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் உங்கள் பயண அனுபவம் குறித்து ரயில்வே துறைக்கு கருத்துக்களும் வழங்கலாம். இப்படி ரயிலில் பயணிக்க தேவையான அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் கிடைக்கும் படி உருவாக்கப்பட்டு உள்ளது ‘ரெயில் ஒன்’ செயலி. அதனால், இனிமேல் ட்ரெயின் டிராவலர்களுக்கு ஜாலி தான்!