
சென்னை: மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் காவல்துறை விசாரணையில் கொல்லப்பட்டதைக் கண்டித்து தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும், கடந்த 4 ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர் நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.