
குப்பம்: ஆண்டுக்கு 2 ஆயிரம் டிஎம்சி கோதாவரி நீர் கடலில் கலக்கிறது. இதில் 200 டிஎம்சி அளவு தண்ணீர் மக்களின் நலனுக்காக உபயோகப்படுத்தப்படும் என்று குப்பம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த 2 நாட்களாக தனது சொந்த தொகுதியான குப்பம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நல திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாக்களில் கலந்து கொண்டார். நேற்று காலை குப்பத்தில் உள்ள தனது சொந்த வீட்டில் செய்தியாளர்களிடம் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: எங்கள் அரசு ஆட்சிக்கு வந்த இந்த ஓராண்டில் ராயலசீமா தண்ணீர் பிரச்சினையை தீர்க்க ரூ.3,950 கோடி ஹந்திரி-நீவா குடிநீர் கால்வாய் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்தோம். சிறிய நீர்பாசன திட்டங்களுக்கு 90 சதவீதம் மானியம் வழங்கி வருகிறோம். கோதாவரியில் ஆண்டுக்கு 2000 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதில் 200 டிஎம்சி நீர் விவசாயத்திற்காக உபயோகப்படுத்தி கொள்ளப்படும். இதனால் தெலங்கானாவிற்கு நஷ்டம் ஏதும் இல்லை. இதுபோன்று விவசாயிகள் நஷ்டம் அடையாமல் இருக்க வழிகளை உருவாக்கி கொடுத்துள்ளோம்.