
சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு Good touch, Bad touch குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அண்மையில் அரசு பள்ளி ஒன்றில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்குப் பின்னர் பெண் காவலர்களை தனியாகச் சந்தித்துப் பேசிய 6 -ம் வகுப்பு மாணவி ஒருவர், அறிவியல் ஆசிரியர் தங்களிடம் உடல்ரீதியாக தொடர்ந்து அத்துமீறி வருவதாக புகார் கூறியிருக்கிறார்.
இதன் அடிப்படையில் அந்த மாணவி மற்றும் சக மாணவிகளிடமும் காவல்துறையினர் ரகசியமாக விசாரணை நடத்தியுள்ளனர். இதில், அந்த பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்த செந்தில் குமார் என்பவர் 20 -க்கும் அதிகமான மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததைக் கண்டறிந்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இது குறித்து ஆசிரியர் செந்தில் குமார் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அதிர்ச்சிப் பின்னணி குறித்து தெரிவித்த காவல்துறையினர், “கோத்தகிரியைச் சேர்ந்த 50 வயதான செந்தில்குமார், கடந்த 23 ஆண்டுகளாக அறிவியல் ஆசிரியராக தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வந்திருக்கிறார். கடந்த ஜூன் மாதம் தான் இந்த அரசு பள்ளியில் சேர்ந்திருக்கிறார்.
6 முதல் 8 -ம் வகுப்பு வரை அறிவியல் பாடம் நடத்தி வந்த இவர், மாணவிகளிடம் தவறான தொடுதலில் ஈடுபட்டு பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். முத்தமிடுதல், தவறான தொடுதல் என 21 மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததை உறுதி செய்தோம்.

ஒரு சில மாணவிகள் வெளியில் புகார் அளிக்க முயற்சி செய்வதை அறிந்து அவர்களை மிரட்டி வெளியே சொல்ல விடாமல் தடுத்து வந்திருக்கிறார். இதனால், அச்சமடைந்த மாணவிகள் இது குறித்து யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளனர்.
நாங்கள் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் இந்த கொடூரம் வெளி வந்துள்ளது. ஆசிரியர் செந்தில் குமாரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளோம். இவர் பணியாற்றிய மற்ற பள்ளிகளும் விசாரணை நடத்தப்படும். துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது ” என்றார்.