
“சோசலிசம்” மற்றும் “மதச்சார்பின்மை” என்ற சொற்களை இந்திய அரசியலமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
இந்த நிலையில், “மதச்சார்பின்மை” என்ற வார்த்தை குறித்து சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி சர்ச்சையான கருத்தை தெரிவித்திருக்கிறார்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்திலுள்ள ஜோதிஷ்வர் பீடம், நாட்டில் உள்ள ஐந்து பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் தலைவரான சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி, சங்கராச்சாரியர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
நேற்று (ஜூலை-3) தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்தப்பேட்டியில், “மதச்சார்பின்மை” என்ற இந்த வார்த்தை முதலில் இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இல்லை. பின்னர் தான் சேர்க்கப்பட்டது. என்னைப் பொறுத்தவரை, இந்த சொல் அரசியலமைப்பின் அடிப்படை தன்மையுடன் ஒத்துப்போகவில்லை, அதனால்தான் இது மீண்டும் மீண்டும் விவாதப் பொருளாகிறது.
‘தர்மம்’ என்றால் சரி, தவறு பற்றி சிந்தித்து, சரியானதை ஏற்றுக்கொண்டு, தவறை நிராகரிப்பதாகும். மதச்சார்பற்றவராக யாராலும் வாழ முடியாது. எனவே இந்த வார்த்தை சரியல்ல.” என்றார். இது மீண்டும் சமூக ஊடகங்களில் விவாதமாகியிருக்கிறது.
இதற்கிடையில், சிபிஐ எம்பி. பி.சந்தோஷ் குமார், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், “பிரச்னைக்காக இதுபோன்ற விவாதங்களைத் தூண்டுவதை ஆர்.எஸ்.எஸ் நிறுத்த வேண்டிய நேரம் இது. மதச்சார்பின்மை என்ற இந்த வார்த்தைகள் தன்னிச்சையான செருகல் அல்ல. இந்தியாவின் அடிப்படை இலட்சியங்கள்.

இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், மதச்சார்பின்மை பன்முகத்தன்மையில் ஒற்றுமையை உறுதி செய்கிறது. அதே நேரத்தில் சோசலிசம் நமது ஒவ்வொரு குடிமக்களுக்கும் நீதி மற்றும் கண்ணியத்தை உறுதி செய்கிறது. முதலில் இந்திய அரசியலமைப்பை உண்மையிலேயே ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக்கொள்கிறதா என்பதை தெளிவுபடுத்துங்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.