• July 4, 2025
  • NewsEditor
  • 0

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறையினரால் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமாரின் அதிகாரப்பூர்வ உடற்கூராய்வு அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடற்கூராய்வு மருத்துவ அறிக்கை

மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் மனதை பதற வைக்கும் அளவுக்கு அஜித்குமார் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரமான சித்திரவதையை வெளிக்கொண்டு வந்துள்ளது.

மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை பார்ப்போம்.

அஜித்குமாரின் உடலில் சுமார் 50 வெளிப்புற காயங்கள் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 12 சிராய்ப்பு காயங்கள் என்றும், மீதமுள்ளவை அனைத்தும் ரத்தக் கட்டு (கன்றிய காயங்கள்) எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காயங்கள் வெறும் வெளிப்படையான காயங்கள் அல்ல. ஒவ்வொன்றும் பல தாக்கங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன.

ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இதில் தெளிவாக தெரிகின்றன. காயங்கள் பல்வேறு கோணங்களில் உள்ளதால், பலர் சேர்ந்து பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்தி தாக்கியிருக்க வாய்ப்பு உள்ளது.

அதிலும் வயிற்றின் நடுவே கம்பியால் குத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது மிக அதிர்ச்சியளிக்கிறது. இது உயிருக்கு ஆபத்தான காயமாகக் கருதப்படுகிறது. மேலும் தலையில் (கபாலத்தில்) கம்பியால் அடிக்கப்பட்டதால், மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது என்றும், இது மரணத்திற்கான முக்கியமான காரணமாக இருந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், சிகரெட் சூட்டால் எரித்துச் சித்திரவதை செய்யப்பட்டது பற்றிய தகவலும் மருத்துவ அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இது மனித உரிமைகளுக்கே எதிரான சித்திரவதை முறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

அஜித்குமார்

மருத்துவ நிபுணர்களின் மதிப்பீட்டுப்படி, இந்த அளவிலான தாக்கங்கள், ஒரு விபத்தில் ஏற்பட்டவையாக இருக்க முடியாது. இது திட்டமிட்டு, தொடர்ந்து பல மணி நேரங்கள் நடத்தப்பட்ட தீவிரமான காவல் சித்திரவதை என்றும் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவ அறிக்கையை தொடர்ந்து, மனிதத் தன்மையமற்ற இந்த கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள், அவர்களுக்கு உத்தரவிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், அஜித்குமாரின் கொலைக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *