
சென்னை: மின்வாரியத்துக்கு டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான புகார் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்குவது தொடர்பாக ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 2021- 23 காலகட்டத்தில் தமிழக மின்வாரியத்துக்கு 45,800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய ரூ.1,182 கோடியே 88 லட்சத்துக்கு டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டர் மூலம் ஒப்பந்ததாரர்களுக்கு லாபம் கிடைக்கச் செய்து, அதன்மூலம் அரசுக்கு ரூ. 397 கோடி இழப்பு ஏற்படுத்தியுள்ளதாகவும், இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.