• July 3, 2025
  • NewsEditor
  • 0

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரதட்சணை கொடுமை, கணவரின் உடல்ரீதியான சித்ரவதை தாங்க முடியாமல் ரிதன்யா என்ற இளம்பெண் காரில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் கவின்குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவானது திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவின் மீது இடைக்கால மனு தாக்கல் செய்த ரிதன்யா தரப்பு வழக்கறிஞர், கவின்குமார் மற்றும் அவரது தந்தை ஈஸ்வரமூர்த்திக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று கோரியுள்ளனர்.

ரிதன்யா

இது குறித்து ரிதன்யா தரப்பு வழக்கறிஞர் மோகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த சம்பவத்தில் கைது செய்த சில நாள்களிலேயே ஜாமீன் கூறி எதிர்த்தரப்பினர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். எனவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்க கூடாது என பெற்றோர் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளைக்கு நடைபெறும். வழக்கு விசாரணையில் நிறைய தொய்வு இருக்கிறது. வெறும் தற்கொலை வழக்காக மட்டுமே பதிவு செய்துள்ளனர். முதல் தகவல் அறிக்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால், மாற்றம் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா செல்போனில் பேசிய ஆடியோ வாக்குமூலங்களாக பதிவு ஆகவில்லை.

ரிதன்யா

காவல்துறை வழக்கு விசாரணையை மட்டுப்படுத்துகிறது. மூன்றாவது குற்றவாளியான கவின்குமாரின் தாய் சித்ராதேவியை போலீஸ் அழைத்துச் சென்று விடுவித்ததாக சொல்கிறார்கள். மூன்றாவது குற்றவாளியை காவலில் எடுத்து விசாரித்தால் தான் முழு விவரம் தெரியவரும். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளோம். புகார்தாரர் கொடுக்கும் முழு விவரங்களைக் கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் போலீஸார் செயல்படுகின்றனர். எனவே, இந்த விளக்கை சிபிசிஐடி விசாரிக்க வலியுறுத்தி நீதிமன்றத்தை நாட இருக்கிறோம்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *