
அரசு ஒப்பந்ததாரர் என்றாலே பணம் தாராளமான புரளும். அதுவும் ஆளும் கட்சி அரசு ஒப்பந்தாரர் என்றால் சொல்லவேண்டாம். மத்திய பிரதேசத்தில் அரசு ஒப்பந்தாரர் அனூப் அகர்வால் என்பவர் புதிதாக மிகவும் கலைநயத்தோடு இந்தூரில் புதிய வீடு ஒன்றை கட்டி இருக்கிறார்.
இந்த வீடு இப்போது அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. வீட்டில் ஏராளமான ஆடம்பர சொகுசு கார்களையும் நிறுத்தி இருக்கிறார்.
புதிய வீட்டில் சீலிங் முழுக்க தங்க தகடுகளால் மறைக்கப்பட்டுள்ளது. அதோடு வீட்டின் நம்பர் பிளேட், சுவர், தண்ணீர் பைப், ஸ்விட்ச்போர்டு உள்பட அனைத்து பகுதியிலும் தங்கத்தகடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தங்கமும் 24 காரட் கொண்டதாகும். மிகவும் அழகான வீடுகளை வீடியோ எடுத்து வெளியிடுவதை பிரியம் சரஸ்வத் என்பவர் வழக்கமாக கொண்டுள்ளார். அனூப் அகர்வால் வீடு குறித்து கேள்விப்பட்ட பிரியம் அந்த வீட்டிற்கு சென்று அனூப் அகர்வால் அனுமதியுடன் வீட்டை வீடியோ எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
வீட்டில் எப்படியெல்லாம் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது என்பதை பிரியம் தனது வீடியோவில் தெரிவித்து இருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானவுடன் அது வைரலானது.
அரசு ஒப்பந்ததாரர் வீட்டை தங்கத்தால் கட்டி இருப்பதாகவும், தங்கத்தால் அலங்கரித்து இருப்பதாகவும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர்.
பாலங்கள் ஆற்றில் விழுவது ஏன் தெரியுமா? – கேரளா காங்கிரஸ்
கேரளா காங்கிரஸ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,”நமது நெடுஞ்சாலைகள் இடிந்து விழுவதும், பாலங்கள் ஆற்றில் விழுவதும் ஏன்? இங்கே அதற்கான பதில்களைக் பாருங்கள். இந்தூரைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் தங்கத்தால் செய்யப்பட்ட குழாய்கள் மற்றும் சுவிட்சுகளால் ஆன ஒரு வீட்டைக் கட்டியுள்ளார்.
கடுமையாக உழைத்து 40 லட்சம் சம்பாதித்த பானி பூரி வாலா வீட்டில் சோதனை செய்ய சென்ற அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இந்த ஒப்பந்தாரர் வீட்டிற்கு வருவதை விரும்பமாட்டார்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.

விசாரிப்பார்களா? – நெட்டிசன்கள் குமுறல்
அதனை பார்த்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்துள்ளனர். அரசு பணத்தை தவறாக பயன்படுத்தி ஒப்பந்தாரர் இந்த அளவுக்கு ஆடம்பரமாக வாழ்வதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
ஒருவர் தனது பதிவில்,”தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, ஐடி அதிகாரிகள் இப்போது வீட்டைச் சோதனை செய்வார்களா, ஒரு அரசு ஒப்பந்ததாரர் எப்படி இவ்வளவு ஆடம்பரமான பங்களாவில் வாழ்கிறார் என்பதை விசாரிப்பார்களா?” என்று கேட்டார்.
மற்றொருவர் ஏன் அமலாக்கப்பிரிவு இது குறித்து விசாரிக்கவில்லை. முதல்வருக்கும், இந்த ஒப்பந்ததாரருக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து உடனே விசாரிக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
வீட்டில் மாட்டு தொழுகை ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. இது குறித்து குறிப்பிட்ட ஒரு நெட்டிசன், மாட்டு தொழுகை வீடியோவிற்காகத்தான் கட்டப்பட்டப்பட்டு இருக்கவேண்டும். அது தற்காலிகமானதாகத்தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மற்றொருவர் புதிதாக கட்டப்படும் மேம்பாலங்கள் திறக்கப்படுவதற்கு முன்பே இடிகிறது. சாலைகள் கட்டி முடிக்கப்பட்டு ஒரு ஆண்டுக்குள் குண்டும் குழியுமாக மாறுகிறது”என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசு ஒப்பந்ததாரர் சொல்வதென்ன?
இந்த வீடியோ வைரலாகி சர்ச்சையானதை தொடர்ந்து பிரியம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அந்த வீடியோவை அகற்றிவிட்டார். ஆனாலும் அது தொடர்ந்து அனைவராலும் பகிரப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வீடியோவை இது வரை ஒரு கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
அனூப் அகர்வால் தனது குடும்பம் குறித்தும் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். அதில் தனது குடும்பம் 25 பேரை கொண்டது என்றும், அதற்கு ஒட்டுமொத்தமாக ஒரு பெட்ரோல் பல்க் மட்டும் இருந்ததாகவும், எனது குடும்பத்தை நடத்துவதற்கு ஒரு பெட்ரோல் பம்ப் போதுமானது இல்லை என்று கருதி அரசு ஒப்பந்ததாரராக மாறியதாக குறிப்பிட்டுள்ளார்.
அவரது நிறுவனம் சாலை, மேம்பாலம் மற்றும் அரசு கட்டிடங்களை கட்டும் ஒப்பந்தங்களை எடுத்து கட்டி வருகிறது. எப்போதும் இந்தூரில் புதிய கார் அறிமுகம் செய்யப்பட்டால் அதனை வாங்கும் முதல் ஆளாக நான் தான் இருப்பேன் என்றும் அகர்வால் தெரிவித்துள்ளார்.