
திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கை தமிழில் மந்திரங்கள் ஓதி நடத்தக்கோரி ஆழ்வார் திருநகரிதிருநகரியைச் சேர்ந்த அ.வியனரசு தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முடித்து வைக்கப்பட்டது.
ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த அ.வியனரசு, உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில், “எதிர்வரும் 07 .7 .2025 அன்று திருச்செந்தூரில் நடைபெற உள்ள முருகன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரங்களைப் பயன்படுத்தக் கோரி இந்து சமய அறநிலையத்துறைக்கு பல மனுக்களை அனுப்பியிருந்தேன். தமிழ்நாட்டிலுள்ள திருக்கோயில்கள் அருளாளர்களாலும், தமிழ் மன்னர்களாலும் உருவாக்கப்பட்டவை. நம்முடைய பழந்தமிழ் நாகரீகமும் பண்பாடும் திருக்கோயில்களை மையமாகக்கொண்டு தோன்றியவை.
காலங்காலமாகத் தமிழ்நாட்டு திருக்கோயில்களில் தமிழே வழிப்பாட்டு மொழியாகவும் இருந்தது. இன்றும் அவை கிராமங்களின் குலதெய்வ கோயில்களில் தொடர்கிறது. தேவாரம் பாடிய சுந்தரர், “அர்ச்சனைப் பாட்டும் தமிழே” என்றார். “என்னை நன்றாகப் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறு” என்றார் திருமந்திரத்தில் திருமூலர்.
நாளடைவில் திருக்கோயில்களின் வழிபாடுகள் எல்லாம் வடமொழி மயமாகி விட்டது. இந்நிலையில் பக்தர்களின் வழிபாடுகள், திருக்குடமுழுக்கு நன்னீராட்டு நிகழ்வுகள் யாவற்றிலும் தெய்வத் தமிழ் இடம் பெறவேண்டும் என அடியார்களாலும் பக்தி உள்ளம் கொண்ட தமிழ்ச் சான்றோர்களாலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அவ்வகையில் தமிழ்நாட்டிலுள்ள இந்து சமய திருக்கோயில்களின் அன்றாட வழிபாடுகளையும் குடமுழுக்கு உள்ளிட்ட நிகழ்வுகளையும் தெய்வத் தமிழிலே நடத்த வேண்டுமென்பது தமிழ் மக்களின் விருப்பமாகும். அதை ஏற்று உயர்நீதிமன்றமும் தஞ்சை பெருவுடையார் பெரியகோயில் குடமுழுக்கு நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் நல்ல தீர்ப்புகளை அளித்துள்ளது.

அதுபோல் 2015 டிசம்பரில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது குறித்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதி மன்றம், சமஸ்கிருதத்தில் தான் கருவறை அர்ச்சனை நடைபெறவேண்டும் என எந்த ஆகமும் நிபந்தனை விதிக்கவில்லை என்று உறுதிபடத் தெரிவித்தது.
மேலும், தமிழ்நாடு அரசு, கோயில் கருவறையில் தமிழ் மந்திரம் ஓதி அர்ச்சனை செய்வதற்கு இந்து அறநிலையத்துறையின் சுற்றறிக்கையும் (எண்-73848/1997) அரசாணையும் (எண்-520/18-11-1997) கோயில்களின் கருவறையிலும் கோபுர கலசங்களில் புனித நீர் தெளிப்பு மற்றும் வேள்விகளிலும் ஓதுவதற்கு தமிழ் மந்திரங்களைத் தமிழ்நாட்டு அரசின் இந்து அறநிலையத்துறை அச்சிட்டு வெளியிட்டுள்ளது. அதற்காக அர்ச்சகர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது என எடுத்துரைத்து இந்து அறநிலையத்துறைக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பியுள்ளேன்” என்று தெரிவித்திருந்தார்.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள நாராயணன், தமிழ் ராஜேந்திரன் வாதிட்டனர்.
இந்த மனு நேற்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் மரிய கிளாட் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பு வழக்கறிஞர் “மனுதாரர் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நடக்கவிருக்கும் குடமுழுக்கில் 50 விழுக்காடு சமஸ்கிருதமும், 50 விழுக்காடு தமிழும் கலந்து குடமுழுக்கு நடத்த தயாராக இருக்கிறோம்” என்ற எழுத்து பூர்வமாக அறிக்கை சமர்பித்திருந்தார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் “சமஸ்கிருத மந்திரங்களுக்கு இணையாக தமிழைப் பயன்படுத்த இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும், சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் வித்தியாசமான நிலை இல்லாமல் சமநிலைக் கொடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டதுடன் வழக்கையும் முடித்து வைத்தனர்.