
சென்னை: சென்னையில் நேற்று பிற்பகல் வரை வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை நேரத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன. இதையடுத்து, சிறிது நேரத்திலேயே நுங்கம்பாக்கம், கோபாலபுரம், அடையாறு, கோட்டூர்புரம் உள்ளிட்ட இடங்களிலும், அம்பத்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்யத் தொடங்கியது.
மழை நள்ளிரவு வரை விட்டுவிட்டு பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். சென்னையின் பிரதான பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் கடந்த ஒரு வாரமாக வெயில் சுட்டெரித்த நிலையில், நேற்று பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் சென்னை வாசிகள் மகிழ்ச்சியடைந்தனர்.