• July 3, 2025
  • NewsEditor
  • 0

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அஜித்குமார் என்பவர் தனிப்படை போலீஸாரின் சித்ரவதையால் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.

பின்னர் இது கொலை வழக்காகப் பதிவுசெய்யப்பட்டு, இதில் ஈடுபட்ட போலீஸார் 5 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் இவ்வழக்கு நடைபெற்று வருகிறது.

அஜித்குமார்

அதேசமயம், இதில் சிபிஐ விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.

மேலும், உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரருக்கு அரசுப் பணியும், அவரது குடும்பத்துக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும் தமிழக அரசு வழங்கியிருக்கிறது.

இவ்வாறு, இச்சம்பவம் தொடர்பாக அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் வேளையில், “அஜித்குமாரை சித்ரவதைச் செய்ய ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்?” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அன்புமணி, “சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர்களால் கொல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞரை சித்திரவதை செய்யும்படி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்குக் கூட தகவல் தெரிவிக்காமல் காவல்துறை துணை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு காவல்துறை உயரதிகாரி ஒருவர் ஆணையிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்த அதிகாரி யார்? என தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.

இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு விட்டாலும் தமிழகக் காவல்துறையை சீர்திருத்த இத்தகைய அதிகாரிகளை அடையாளம் கண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று வலியுறுத்தியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *